சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாயாக அறவிடப்படவுள்ளது.
Transparency International நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 115 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 0 (அதிக ஊழல்) – 100 (ஊழலற்ற நாடு) எனும் அளவில் நாடுகளை மதிப்பீடு செய்து Transparency International நாடுகளை தரப்படுத்துகின்றது. இந்த பட்டியலில் 180 நாடுகள் தரப்படுத்தப்படுகின்றன. இந்த பட்டியலுக்கு அமைய, இலங்கை 2023 ஆம் ஆண்டு 115 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இலங்கை 117 ஆவது இடத்தில் இருந்தது.
நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஸ நியமக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கான நியமனக் கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செங்கடலில் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் 29 நாட்களில் 330-இற்கும் அதிகமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் U.குமார தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொழும்பு துறைமுகத்தில் கையாளப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
TIN அல்லது வரி அடையாள எண்ணைப் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என அரசாங்கம் தீர்மானித்திருந்தது. ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கையை கட்டாயமாக்குவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சுக்கு முன்பாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, சம்பளம், கொடுப்பனவு பிரச்சினை உள்ளிட்ட சுகாதாரத்துறையில் உள்ள ஏனைய நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. வைத்தியர்களுக்கான கொடுப்பனவை 35,000 ரூபாவினால் அதிகரிப்பது உள்ளடங்கலாக அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் பொருளாதார நியாயத்தை வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்பிற்கு வருகை தந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த பேரணி இடம்பெறுகிறது. கொழும்பு விகாரமகாதேவி பூங்கா அருகில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது.
மறைந்த புளொட் சுவிஸ் உறுப்பினர் மனோகரன் முருகதாசன் அவர்களின் நினைவாக அவரது பிறந்த ஊரான புலோலியில் அமைந்துள்ள கந்த முருகேசனார் சனசமூக நிலையத்துக்கு புளொட் சுவிஸ் தோழர்களின் நிதியுதவியின் கீழ் நூலகக் கட்டிடத் திருத்தத்துக்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 27.01.2024 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் புலோலி கந்த முருகேசனார் முன்பள்ளியிலே, குறித்த முன்பள்ளியின் முகாமைத்துவக் குழுவின் தலைவர் மு.ஜெகதேவன் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் 166,998 பேர் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெற்றிருந்தனர். அவர்களில் 84, 150 பேர் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தனர்.
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று நாட்டுக்கு வருகைதரவுள்ள அவர் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருடன் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடும் நிகழ்விலும் அவர் பங்குபற்றவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.