வட்டுக்கோட்டை காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரின் விளக்கமறியலில் எதிர்வரும் 16ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (02) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ஏற்பட்ட காயங்களினால் குறித்த இளைஞன் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் உயிரிழந்த குறித்த இளைஞனை சித்திரவதைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஐந்து காவல்துறையினர் மற்றும் மேலதிக சந்தேக நபர்களையும் விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கு விசாரணைப் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டார்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் காவல்துறையினர் தொடர்புபட்டிருப்பதால் நீதிமன்ற கட்டளையின் பிரதியை காவல்துறைமா அதிபருக்கு அனுப்புமாறும் மன்று கட்டளையிட்டது. இந்த நிலையில் குறித்த வழக்கின் குற்றப் பத்திரத்தினை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியதுடன் மூல வழக்கை சட்டமா அதிபருக்கு சமர்பிக்குமாறும் மன்றின் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 26 வயதுடைய இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த நவம்பர் 18 ஆம் திகதி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.