வவுனியாவில் இன்று (05) நடைபெற்ற வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று முன்னெடுத்தனர். இதன்போது, ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றையவர் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வட மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதன்போது, ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதிக்குமாறு கோரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் நகர சபை சந்தியில் கவனயீர்ப்பொன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, ஒருவருக்கு மட்டுமே ஜனாதிபதியை சந்திப்பதற்கான அனுமதியை வழங்குவதாக பொலிஸார் கூறிய போதிலும் அதனை அவர்கள் மறுதலித்தனர்.
இதனையடுத்து, பொலிஸாருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இன்போது இருவரை பொலிஸார் கைது செயதனர்.