அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் அரசாங்கம் தலையீடு செய்யாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது என்பதால், அரசாங்கம் இதில் தலையீடு செய்யாதென அவர் கூறியுள்ளார். அதேபோன்று, அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும், 13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தமது மாகாணத்தின் அபிவிருத்திக்காக தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமெனவும் அனைத்து மாகாணங்களினதும் மக்கள் பிரதிநிதிகளிடத்தில் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். மாவட்ட தொழில் வல்லுனர்களுடன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இவற்றைக் கூறியுள்ளார்.

அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுனர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

2024 – 2025 இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வருடங்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக கொள்கை ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள மூலோபாய மாற்றங்கள் குறித்தும் அறிவுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தை தனித்துவமான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப முடியுமெனவும் வடக்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக உருவாக்க முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

மேலும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற “Zee Tamil” சரிகமப “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய கில்மிஷா உதயசீலன், தனது குடும்பத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

கில்மிஷா உதயசீலன் நாட்டிற்கு தேடித்தந்த புகழுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவரது கல்வி செயற்பாடுகள் மற்றும் இசை வாழ்விலும் வெற்றிபெற ஆசிகளை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.