வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி இளங்கோதை வலியுறுத்தியுள்ளார். வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நீண்ட காலமாக காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை விடுவியுங்கள் அல்லது எங்களிடம் காண்பியுங்கள் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

அரசாங்கத்திடம் வேறு எதையும் கேட்கவில்லை. பணமோ நஷ்ட ஈட்டையோ நாங்கள் கேட்கவில்லை. நேற்றைய தினம் ஜனாதிபதியின் வருகையின் போது வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி ஜெனிற்றாவை பலவந்தமாக இழுத்து சென்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு பௌத்த மத குரு தமிழர்கள் அனைவரையும் வெட்டிக் கொல்லுவேன் என வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால், அவரை இன்று வரை கைது செய்யவில்லை. ஏன் அவ்வாறானவர்களை தவிர்த்து ஜனநாயக ரீதியில் எமது பிள்ளைகளை கேட்டு போராடுகின்ற எங்களை கைது செய்கின்றீர்கள்.

இந்த செயற்பாடானது அரசாங்கம் கொடூரமான ஆட்சியை செய்கின்றது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. எனவே, நேற்று வவுனியாவில் கைது செய்யப்பட்ட எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி ஜெனிற்றாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.