மத்திய ஆபிரிக்காவில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளது. MI வகையை சேர்ந்த குறித்த விமானம் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும், விமானப்படை வீரர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக விமானம் விபத்திற்குள்ளாகியதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் கடற்படைத் தளபதியின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் மக்களின் இறையாண்மை, அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட வேண்டியவை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1,78,000 வரை உயர்வடைந்துள்ளது. இதில் அதிக அளவிலானோர் அம்பாறை மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 1,69,000 பேர் அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, பதுளை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில், கல்லேல்ல பகுதியூடாக கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில்கலந்துகொண்டிருந்தார். இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் நீதிமன்ற கட்டளையினை மீறியதாக தெரிவித்து வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.