வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1,78,000 வரை உயர்வடைந்துள்ளது. இதில் அதிக அளவிலானோர் அம்பாறை மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 1,69,000 பேர் அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, பதுளை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில், கல்லேல்ல பகுதியூடாக கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை வெள்ள நிலைமையை ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.

எதிர்வரும் சில மணித்தியாலங்களில் குறித்த வீதியை இலகுரக வாகனங்களுக்காக திறக்க முடியும் என ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.

இதனிடையே, மண்சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து, ஹாலிஎல – உடுவர பிரதேசத்தின் ஏழாம் கட்டையில் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் காணப்படுவதுடன், வீதியில் வெடிப்புகள் காணப்படுவதாகவும் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பிபிலை – லுணுகலை வீதியையும் சில கட்டுப்பாடுகளுடனேயே பயன்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பசறை – மடுல்சீம வீதியும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதுடன், அதற்கான மாற்றுவீதி உருவாக்கப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் E.M.L.உதயகுமார தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சேனாநாயக்க சமுத்திரம் வான்பாய்வதினால் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சேனாநாயக்க சமுத்திரத்தில் இருந்து விநாடிக்கு 11,000 கன அடி நீர் விடுவிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் கல்ஓயவின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து விடுவிக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளமையினால், மாணிக்க கங்கையை அண்மித்து காணப்பட்ட வௌ்ள நிலைமை படிப்படியாக குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வௌ்ள நிலைமையினால் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் வழமையான முறையில் முன்னெடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய,  இன்று பிற்பகல் 3.35-க்கு புலதிசி நகர்சேர் ரயில், கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவுள்ளது.

கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை இன்று  முதல் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பசறை – குடுகலபத்தனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கெந்தகாமடபத்தனை கிராமத்தில் தொடர் மழையினால் நிலத்தில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டு மண்சரிவு அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 19 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

இந்த நிலையில், மாவிலாறு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வெருகல் – மாவடிச்சேனை பகுதியில் வௌ்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள சுமார் 100 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.