பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நேற்று நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் குறித்த தினத்திற்குள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். 80% பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மாலைத்தீவில் இருந்து 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ஷல் தீவுகள் கொடியுடனான இந்தக் கப்பலில் அமெரிக்க, கனேடிய மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று வருகை தந்துள்ளது. இந்த குழுவினர் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் நாளைய தினம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் அதன்பின்னர் தாய்லாந்தின் புக்கெட் துறைமுகத்துக்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது
இந்நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப்பேச்சாளர் அஜித் வீரசுந்தர குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மாவட்டத்தில் பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 105 புள்ளிகளாகவும், யாழ்ப்பணத்தில் 100 புள்ளிகளாகவும் அதிகரித்துள்ளது.
நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், விமான நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை 1,325 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.