திருகோணமலையில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன், S.சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் இலங்கை தமிழசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டிருந்தனர். இந்நிலையில், 184 வாக்குகளைப் பெற்று சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளை பெற்றுக்கொண்டதாக கட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். Read more
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பாலஸ்தீன வெளிவிவகார மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான அமைச்சர் கலாநிதி ரியாட் மல்கிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று ஆரம்பமான “G77 மற்றும் சீனா” 3 ஆவது தென் துருவ மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மாலைதீவு உப ஜனாதிபதி ஹுசைன் மொஹமட் லத்தீப் (Hussain Mohamed Latheef) ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று ஆரம்பமான “G77 மற்றும் சீனா” 3 ஆவது தென் துருவ மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பு இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உகண்டா – கம்பாலா நகரில் நடைபெறும் ஜீ 77 மற்றும் சீனாவின் 3ஆவது தென் துருவ மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் உரையாற்றியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜீ 77 உறுப்பு நாடுகளின் வளர்ச்சி சவால்கள் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு பணிகள் குறித்து இந்த மாநாட்டின்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகண்டாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த நாட்டு ஜனாதிபதி யொவேரி முசேவேனியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சரிவடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தை, உகண்டா ஜனாதிபதி இந்த சந்திப்பின்போது பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.