நாளை காலை 8 மணி முதல் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வைத்தியர்களுக்கான 35,000 ரூபா கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டதால், திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாத சம்பளத்துடன் வைத்தியர்களுக்கு வழங்கப்படவிருந்த 35,000 ரூபா கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.

வைத்தியர்களின் ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்கப்படவிருந்த கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பிற்பகல் கடிதமொன்று வௌியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, நாளை காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பிற்பகல் அறிவித்தது.

இந்நிலையில், கொடுப்பனவை இடைநிறுத்தி வெளியிடப்பட்ட கடிதத்தை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீளப் பெற்றுக்கொண்டதால், தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்ததாக டொக்டர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.