இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்தன.
இணைவழி பாதுகாப்பு சட்டமூலம் பரந்த மற்றும் தெளிவற்ற பேச்சு தொடர்பான குற்றங்களுக்கு நீண்ட கால சிறைத்தண்டனைகளை ஏற்படுத்தும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு இறுதியில் இலங்கை, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்குத் தயாராகி வரும் நிலையில், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை குறித்த சட்டம் கடுமையாக அச்சுறுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், இலங்கையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைதாகியுள்ள சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஶ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 7 பேரும் எதிர்வரும் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டது. அமைச்சர் ஒருவர் அல்லது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை பாதுகாப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது தமது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அவர் குற்றவியல் பிரிவு பிரதி பொலிஸ்மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தாம் பொலிஸ் ஊடகப்பேச்சாளராக தொடர்ந்தும் செயற்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.