இணைவழி பாதுகாப்பு சட்டமூலம் பரந்த மற்றும் தெளிவற்ற பேச்சு தொடர்பான குற்றங்களுக்கு நீண்ட கால சிறைத்தண்டனைகளை ஏற்படுத்தும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு இறுதியில் இலங்கை, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்குத் தயாராகி வரும் நிலையில், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை குறித்த சட்டம் கடுமையாக அச்சுறுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலம், இணைய துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் மோசடி ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஜனாதிபதியால் புதிய இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கும், இணையவழியில் தீங்கு விளைவிக்கும் இடுகையை அகற்றுவதற்கும், இணைய அணுகலைக் தடை செய்வது மற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடருவதற்கும் இது வழிவகுக்குமென குறிப்பிடப்படுகின்றது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர்களுக்கு சந்தேகநபர்களின் வளாகத்திற்குள் பிரவேசித்து சோதனையிட அதிகாரம் அளிக்கப்படும்.
குற்றங்களுக்கு அதிக அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், இந்தச் சட்டம் அனைத்து விதமான சட்டபூர்வமான வெளிப்பாட்டையும் குற்றமாக்கக்கூடும் என கருதுகின்றது.
கருத்துச் சுதந்திரத்தின் மீது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது.