பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் 166,998 பேர் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெற்றிருந்தனர். அவர்களில் 84, 150 பேர் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தனர்.
இந்தநிலையில், அவர்களில் 43,101 பேர் இந்த முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவானவர்களின் எண்ணிக்கை இந்த வருடத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களை இலக்கு வைத்து புரியப்படும் பகிடிவதைகள் தொடர்பில் சட்டரீதியான கவனம் செலுத்தப்படும். கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற 80க்கும் மேற்பட்ட பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகள் பகிடிவதையுடன் தொடர்புடையனவாக கருத முடியாது.
அதேநேரம், பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளுக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே, பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் எதிர்கால நலனை சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.