திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதார பணியாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவ சேவைகளின் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் 27 தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
மத்திய ஆபிரிக்காவில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளது. MI வகையை சேர்ந்த குறித்த விமானம் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும், விமானப்படை வீரர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக விமானம் விபத்திற்குள்ளாகியதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் கடற்படைத் தளபதியின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் மக்களின் இறையாண்மை, அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட வேண்டியவை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1,78,000 வரை உயர்வடைந்துள்ளது. இதில் அதிக அளவிலானோர் அம்பாறை மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 1,69,000 பேர் அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, பதுளை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில், கல்லேல்ல பகுதியூடாக கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில்கலந்துகொண்டிருந்தார். இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் நீதிமன்ற கட்டளையினை மீறியதாக தெரிவித்து வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
11.01.1987இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த கழகத்தின் தளப் பொறுப்பாளர் தோழர் மென்டிஸ் (அரியராஜசிங்கம் விஐயபாலன் – யாழ்ப்பாணம்) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… கழகத்தின் சிறந்த பயிற்சி ஆசிரியரான தோழர் மென்டிஸ் அவர்கள், இராணுவப் பயிற்சி அளிப்பதிலும், அரசியல் ரீதியில் இளைஞர்களை வளர்ப்பதிலும் அதீத அக்கறை காட்டி வந்தார். யாழ். மாவட்ட இராணுவப் பொறுப்பாளராகவும் பின்பு தள இராணுவப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்த இவர் மிகச் சிறந்த போர் வீரனாகத் திகழ்ந்தார். இயக்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைக் களையும் செயற்பாடுகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவை இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார். ஜனவரி 21 ஆம் திகதி திருகோணமலையில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தனின் இல்லத்தில் நேற்று (10) நடைபெற்றது.
ஜப்பான் நிதியமைச்சர் Shun’ichi Suzuki இன்று (11) பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தார். அவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரை ஜப்பான் நிதியமைச்சர் Shun’ichi Suzuki சந்திக்கவுள்ளார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனினால், ஜப்பான் நிதியமைச்சர் Shun’ichi Suzuki உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று(10) சமர்ப்பிக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டு, அதன் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் முன்னெடுக்கப்படுமென நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார். இதனிடையே, பெறுமதிசேர் வரிக்கு(VAT) உள்ளாக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைமாற்றம் இதுவரை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். S.M.மரிக்கார் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியிலுள்ள பொலிஸ் காவலரண் அமைந்துள்ள காணி மீது நேற்றிரவு பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இதனால் காவலரணுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 04 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதுடன் அதில் ஒன்று வீதியிலும் ஏனைய 3 குண்டுகள் பொலிஸ் காவலரண் அமைந்துள்ள காணி மீதும் வீழ்ந்துள்ளன. இவற்றில் ஒன்று மாத்திரமே தீப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். மண்டைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பின் போது 1,200 மில்லிகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.