எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என PAFFREL அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கை பிரகடனங்களுக்கு பொதுவான கட்டமைப்பை தயாரிப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பானர் ரோஹன ஹெட்டிஆரச்சி தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை இலக்கு வைத்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து தற்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ரோஹன ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.
முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தொடர்பில் இளைஞர் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு காணி ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தாய்லாந்து எல்லைப் பகுதியை அண்மித்து, மியன்மாரின் கெரன் மாகாணத்தின் மியாவெட்டி பகுதியில் பயங்கரவாத குழுவொன்றினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களையும் சிறப்பு நடவடிக்கையின் மூலம் மீட்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை – மியன்மார் வௌிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலும் BIMSTEC தூதுவர்கள் மற்றும் மியன்மாரின் பிரதி வௌிவிவகார அமைச்சர் இடையிலும் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலில் இது தொடர்பில் சாதகமான பதில் கிடைத்ததாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்தார்.
06.01.1985 இல் மன்னார் வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட பங்குத்தந்தை மேரி பஸ்ரியன் அடிகளார், ஜீவா, கட்சன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களின் 39ஆம் ஆண்டு நினைவுகள்….
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலின் போது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதன் பின்னரும் குறித்த முகாம் அகற்றப்படாத நிலையில் இராணுவத்தினர் கடமையில் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் நேற்றிரவு கனரக வாகனங்களில் வருகைத் தந்த இராணுவத்தினர் குறித்த பகுதியில் பாரிய அளவிலான இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பயணிகளும், பொதுமக்களும் பாரிய அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி இளங்கோதை வலியுறுத்தியுள்ளார். வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நீண்ட காலமாக காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை விடுவியுங்கள் அல்லது எங்களிடம் காண்பியுங்கள் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் 27ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உகண்டாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது, உகண்டா ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உத்தியோகப்பூர்வ கலந்துரையாடலில் சபாநாயகர் ஈடுபட்டுள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசியமாநாடு திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபடி தேசிய மாநாடு ஜனவரி மாதம் 27, 28ஆம் நாட்களில் நடைபெறும். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இந்த மாநாடு மு.ப.10 மணிக்கு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மடு மற்றும் துணுக்காய் ஆகிய இரு பிரதேசங்களை இணைத்து ஒரே கல்வி வலயமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணம் முதலிடத்தை பெற்றுக் கொண்ட நிலையில், க.பொ.த. சாதாரண தர பரீட்சையிலும சிறப்பான பெறுபேறுகள் கிடைத்திருந்தன. இதனோடு மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் தன்னியக்க முக அடையாள கண்காணிப்பு அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. குற்றவியல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய பயணிகளை அடையாளம் காணும் நோக்கில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாள கண்காணிப்பு நிறுவப்பட்டுள்ளது.