Header image alt text

உகண்டா – கம்பாலா நகரில் நடைபெறும் ஜீ 77 மற்றும் சீனாவின் 3ஆவது தென் துருவ மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் உரையாற்றியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜீ 77 உறுப்பு நாடுகளின் வளர்ச்சி சவால்கள் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு பணிகள் குறித்து இந்த மாநாட்டின்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகண்டாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த நாட்டு ஜனாதிபதி யொவேரி முசேவேனியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சரிவடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தை, உகண்டா ஜனாதிபதி இந்த சந்திப்பின்போது பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கான  இரகசிய வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது. திருகோணமலையில் நாளை காலை இதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன், S. ஶ்ரீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்றனர். தலைவரை தெரிவு செய்வதற்காக தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதல் தடவையாக நடைபெறும் வாக்கெடுப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் – பெனின் குடியரசுக்கும் இடையில் நிலவும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெனின் குடியரசின் உப ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன், பருத்தி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள பெனின் குடியரசு, குறித்த தொழிற்துறையில் முதலீடு செய்வதற்கான இலங்கை முதலீட்டாளர்களை பரிந்துரைக்குமாறு அந்த நாட்டின் உப ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது, இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்றையதினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அணிசேரா நாடுகளின் மாநாட்டுடன் இணைந்த வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு முயற்சிகளின் முன்னேற்றத்துக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை பாராட்டியதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. சுகயீன விடுமுறையை பதிவு செய்து, அண்மையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் பங்குபற்றிய குற்றச்சாட்டில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இலங்கை மின்சார சபையின் காசாளர்களே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். நுகர்வோருக்கு இடையூறு ஏற்படும் வகையில் அவர்கள் செயற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால், சிரமங்களை எதிர்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு ஜோர்தான் தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜோர்தானுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள், அந்நாட்டு தொழில் அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பில் அண்மையில் கலந்துரையாடியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. விசா காலாவதியாகியும் தமது நாட்டில் தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்களை அபராதம் எதுவுமின்றி திருப்பியனுப்ப ஜோர்தான் தொழில் அமைச்சின் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. Read more

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அதீத கவனம் செலுத்தியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடகப்பேச்சாளர் Ravina Shamdasani அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.  தற்போது காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக, இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

19.01.1989இல் வவுனியா சமளங்குளத்தில் மரணித்த தோழர்கள் பெரிசு (நவரத்தினம் – கல்நாட்டினகுளம்), ராஜன் (சீனி – வவுனியா) ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலில் இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு உலக அங்கீகாரமிக்க கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதி வாழ்க்கை வாழ்ந்துவரும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று சென்னையில் வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் போது இந்திய மண்ணை நம்பி தஞ்சம் புகுந்த வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். Read more

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட தபாலகங்களில் வாகன அபராதத் தொகையை செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போது மேல் மாகாணத்தில் இரவு நேர தபாலகங்களில் அபராதப் பணத்தை செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த முயற்சி வெற்றியளித்ததையடுத்து, ஏனைய மாகாணங்களிலும் இதே நடவடிக்கைளை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்கு முன்னர் இதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பப்டுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.