நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழுவின் விசேட ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது. சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானது. இவர்கள் கடந்த 11 ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்திருந்தனர். 6 பேர் அடங்கிய சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு, மின்சார சபை, மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடினர். இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான வேலைத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அவர்கள் ஜனாதிபதியை அண்மையில் சந்தித்து, பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொண்டு இலங்கை பெற்றுக்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தொடர்பில் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பொருளாதார மறுசீரமைப்பின் முன்னேற்றம் மக்களிடையே பகிரப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் இன்றைய ஊடக சந்திப்பில் வலியுறுத்தியது.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படுவது மிக முக்கியமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வௌியக கடன் வழங்குநர்களுடனான யோசனையை முன்வைப்பது முக்கியமானது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை அதிகாரிகளால் அமுல்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மீட்சிக்கான முதல் அறிகுறிகளை வழங்கி வருகிறது. எவ்வாறாயினும், இந்த முன்னேற்றங்கள் இலங்கை மக்களின் மேம்பட்ட வாழ்க்கை நிலைமைகளாக மாற்றப்பட வேண்டும் என்பதில் சவால்கள் உள்ளன என சர்வதேச நாணய நிதியம் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்தது.
கடன் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு முன்னதாக கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்பாடுகளை இலங்கை எட்டும் என நம்புவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, சீனாவின் EXIM வங்கியுடனான கொள்கையளவிலான ஒப்பந்தத்தை முழுமையான ஒப்பந்தமாக மாற்ற வேண்டுமெனவும் இலங்கைக்கான IMF தூதுக்குழு வலியுறுத்தியுள்ளது.
வர்த்தகக் கடன் வழங்குநரான சீன அபிவிருத்தி வங்கியுடனும் உடன்பாடு எட்டப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளது.