பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி முதலாம் திகதிகளில் முன்னெடுப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, A.H.M.D. நவாஸ், ஷிரான் குணரத்ன, அர்ஜூன ஒபேசேகர உள்ளிட்ட ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், புதிய பயங்கரவாத அமைப்பொன்று மீண்டும் உருவாகும் என  கருதக்கூடிய சூழல்  காணப்படாத பின்னணியில், இவ்வாறான சட்டமூலத்தின் ஊடாக எதிர் கருத்துகளை ஒடுக்குவதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக, மனுதாரர்களின் சார்பில் விடயங்களை முன்வைத்த சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இலங்கை நாடு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு என அடையாளப்படுத்தப்படுவதன் காரணமாக, மக்களை பாதுகாத்தல்,  அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல் ஆகியன அரசியலமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகளுக்கு எதிராக குரலெழுப்பும் மக்களை ஒடுக்குவதற்கு இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில உட்பிரிவுகள், பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலமாக மாத்திரமின்றி, சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது நீதிமன்றத்திடமே காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஜனாதிபதி சட்டத்தரணி ​M.A.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி நய்ஜல் ஹெடி, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சிரேஷ்ட சட்டத்தரணி லக்ஷான் டயஸ், சட்டத்தரணி தனுக நந்தசிறி, சிரேஷ்ட சட்டத்தரணி ஷாந்த ஜயவர்தன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாத்தினர் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தனர்.

சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நெரில் புள்ளே உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாத்தினர் முன்னிலையாகியிருந்தனர்.