அநாவசியமான பரபரப்பும், அவசியம் தேவைப்பட்ட விளம்பரமும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் 184:137 எனும் வாக்கு விகிதத்தில், சமகாலத்தில் அரசியலுக்குள் நுழைந்து தலைமைத்துவத்தை அடையும் வகையில் காய்களை திட்டமிட்டு நகர்த்தி வந்த சக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களை தோற்கடித்துள்ளார்.

வடக்கில் பெருமளவு வாக்குகளை சுமந்திரன் பெற்றிருக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்திருக்கும். அதே நேரத்தில் கிழக்கில் மிகத் தொகையான வாக்குகள் சிறீதரனுக்கு வழங்கப்பட்டுள்ளன போலத் தெரிகிறது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களிடையே காணப்பட்ட, சாணக்கியனின் ஆதிக்கத்திற்கெதிரான உணர்வு மற்றும் சுமந்திரன் தரப்பினரின் முஸ்லீம்களுடனான அனுசரிப்பும், திருமலையில் குகதாசனுக்கு எதிரான உணர்வு மற்றும் சம்பந்தரின் நிலை பற்றிய அனுதாபமும் வாக்களிப்பில் கணிசமான பங்கை வகித்திருக்கும்.
தமிழரசுக் கட்சியின் வரலாற்றில், தலைவர் தெரிவானது முதல் முறையாக வாக்களிப்பு முறைவரை சென்றமையே அது பற்றிய பரபரப்புக்கு காரணமாயிற்று. சம்பந்தர் – சுமந்திரன் இணைத்தலைமையில் கட்சியில் கடந்த பல வருடங்களாக காணப்பட்ட போக்குக் குறித்து ஏற்பட்டிருந்த அதிருப்தி கட்சியின் செல்வாக்கில் கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதிஷ்டவசமாக தலைவர் தெரிவில் வேட்பாளர்களினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் ஏட்டிக்குப் போட்டியான பிரச்சாரங்களும், கட்சி அனுதாபிகளின் நியாயபூர்வமான பகிரங்கக் கோரிக்கைகளும் தமிழரசுக் கட்சியை நீண்டகாலத்திற்குப் பின்னர் உச்சநிலையிலான பேசுபொருளாக்கியது.
கட்சி நிர்வாகிகள் தெரிவு என்பது கட்சி ஒவ்வொன்றினதும் உள்விவகாரம். சில சமயங்களில் சிலரது தெரிவு வெளித்தரப்புச் செல்வாக்கு கட்சிக்குள் அதிகரித்த நிலையை அடைய வழியை ஏற்படுத்தும். இன்னும் சிலரது தெரிவு கட்சிக்கு வெளியிலான அணுகுமுறைகளில் கட்சி சார்பில் புதிய செல்வாக்கினை செலுத்தும், மாற்றங்களை ஏற்படுத்தும்.
இன்றுள்ள கேள்வி என்னவெனில், புதிய தலைவர் தெரிவு தமிழரசுக் கட்சியின் போக்கில் எத்தகைய செல்வாக்கினை வெளிப்புறத்திலிருந்து செலுத்தும் என்பதும் புதிய தலைமை எவ்வாறான செல்வாக்கை வெளிப்புற விடயங்களில் செலுத்தும் என்பதுமாகும்.
கடந்த பல வருடங்களாக தமிழரசுக் கட்சியின் தீர்மானிக்கும் தரப்பாக இருந்த சம்பந்தர் அவர்கள், அவருடைய கருத்துகள் கோரிக்கைகள் ஆட்சேபனைகள் எதுவுமே கண்டுகொள்ளப் படாத ஒரு நிலையில் நிர்வாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளார். பொருத்தமான காலத்தில் தனது பொறுப்பை எவரிடமேனும் கையளித்திருந்தால், தனது அரசியல் வாரிசை இனம் காட்டியிருந்தால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
மற்றுமொரு தீர்மானிக்கும் நபரான சுமந்திரன் அவர்கள் தேசியத்திற்கு(?) எதிரானவராக அடையாளப்படுத்தப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டுள்ளார். சம்பந்தர் – சுமந்திரன் இணையின் இணக்க அரசியலை ஏற்றுக்கொணட சி வீ கே சிவஞானம், வைத்தியர் சத்தியலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், குகதாசன், சாணக்கியன் போன்றோரின் எதிர்காலம் கட்சி மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.
இவை அனைத்தையும் விட மிகவும் துரதிஷ்டமான விடயம் யாதெனில், கட்சியில் அதிக உரிமை கோரக்கூடிய தகுதியுள்ள மூத்த உறுப்பினரான சேனாதிராஜா அவர்கள் தனது அரசியல் பயணத்திலிருந்து ஓய்வுபெறும் நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் என்பதும் தெரிவு என்பதும் உட்கட்சி ஜனநாயகத்தில் அவ் அமைப்பு கொண்டுள்ள பற்றுறுதியக் வெளிப்படுத்தும். இதனைத் தமிழர் தரப்பில் தமிழரசுக் கட்சிதான் முதன்முறையாக செயற்படுத்துவது போன்ற கருத்தை, தனது போட்டியை நியாயப்படுத்துவதற்காக பல சந்தர்ப்பங்களில் சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார்.
ஆனால் உண்மை அதுவல்ல. ஏனைய அமைப்புகள் பலவும், குறிப்பாக ஆயுதம் தாங்கி போராடி ஜனநாயக நடைமுறைகளுக்குள் தம்மை உட்புகுத்திக் கொண்ட அமைப்புகள் பலவும் ஜனநாயக நடைமுறைகளை பறையடிப்பு ஏதும் செய்யாமல் தொடர்ந்தும் பேணி வந்துள்ளன. காலத்துக்கு காலம் பொதுச்சபைக் கூட்டம், தேர்தல் மூலமான நிர்வாகத் தெரிவு என்பவற்றைச் சந்தித்தே வந்துள்ளன. ஆனால் அவர்களது தேர்தல்கள் எதுவும் பரபரப்பாக இருந்ததில்லை. ஏனெனில் தலைமை மாற்றங்களை அவ் அமைப்புகளின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரும் நிலை இதுவரையிலும் ஏற்படவில்லை.
இவ்வாறான, பாரம்பரியமான, நீண்டகாலத் தலைமைகளால் சிறீதரன் போன்றவர்களுடன் இணைந்து இயங்கும் எண்ணங்கள் சாத்தியமானதா என்பது அடுத்த கேள்வி. தமிழரசுக் கட்சியின் தனித்துவத்தை காப்பவர் என்று நிரூபிப்பதற்காக அவர் பல விடயங்களை இனிமேல் முன்னெடுக்கக்கூடும்.
சம்பந்தர் சுமந்திரனின் அணுகுமுறைகளால் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க முயற்சிக்கலாம். கட்சியின் தனித்துவத்தைப் பேணுவதாகக் கூறிக்கொண்டு எந்தச் சூழ்நிலையிலும் வீட்டுச் சின்னத்தினை விட்டுக் கொடுக்காதிருக்கலாம். புலிகள் தவிர்ந்த ஏனைய முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புகளுடன் பகையுணர்வுகளை எப்போதும் வெளிப்படுத்துகின்ற கிழக்குத் தமிழரசுக் கட்சி (முன்னாள் புலி) உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் அவர்களது எண்ணங்களுக்கு முன்னுரிமை வழங்கலாம். இதுவரை நாடாளுமன்றத்திலும் வெளியிலும் வெளிப்படுத்தி வந்த கடும்போக்காளர் தோற்றத்தில் இன்னும் சற்று அதிகம் முறைப்பைக் காட்டலாம். போலித் தேசியத்தின் போர்வையில் ஏகப் பிரதிநிதித்துவத்தையும் புலிகள் அமைப்பின் எஞ்சிய வளங்களையும் கையகப்படுத்தி வைத்துள்ள டயஸ்பொறாக்களின் நோக்கங்களிற்கு இணங்கி செயற்படும் வகையில் கட்சியை இழுத்துச் செல்லலாம்.
இவ்வாறான போக்குகள், இதுவரை காலமும் தமிழரசுக் கட்சித் தலைமை கடைப்பிடித்து வந்த அணுகுமுறைகளுக்கு மாறானது என்பதோடு எதிர்ப்பு அரசியலுக்கும் இணக்க அரசியலுக்கும் இடைப்பட்ட வெளியில் பயணிக்க முயற்சிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் விக்னேஸ்வரன் கட்சிக்கும்கூட சங்கடமான விடயங்களாகும்.
இத்தனைக்கும் புதிய தலைவர் சிறீதரன் அவர்களின் அரசியல் பயணம் பற்றி குறிப்பிட்டுச் சொல்வதற்கு கடந்த காலங்களில் எதுவும் இருந்ததில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் வேட்பாளர் பட்டியல் ஒதுக்கீட்டில் நாடாளுமன்றம் நுழைந்து பின்பு தமிழரசுக் கட்சியின் பிரமுகராகி, புலிப் போராளி தீபனின் பெயரைப் பயன்படுத்தி, ஏனைய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலவீனங்களை சாதகமாக்கி கிளிநொச்சியில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பிராந்திய அரசியல்வாதி, சுமந்திரனின் செயற்பாடுகளால் வெறுத்துப் போயிருந்த கட்சி உறுப்பினர்களால் ஒரு படி உயர்த்தப்பட்டு தேசிய அரசியல்வாதியாகி விட்டார்.
அரச புலனாய்வாளர்களுடன் இரகசியமான முறையில் தொடர்புகளைப் பேணுபவர், புலம்பெயர் உறவுகளின் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியுதவிகளில் துஷ்பிரயோகம் செய்பவர், அதிகாரத் துஷ்பிரயோகத்தின் துணையுடனான காணி அபகரிப்பு செய்பவர், சக அமைப்புகளுடனான பாதகமான அணுகுமுறை போன்ற பலவாறான விமர்சனங்களுக்குட்பட்ட சிறீதரன் அவர்கள் தலைமைப் போட்டிக்காக, புலி வாலைப் பிடித்தது போல, போலித் தேசிய டயஸ்பொறாக்களிடமும் அவர்களின் நிதி வளத்திலும் சிக்குண்டவர் போலத் தெரிகிறார்.
ஏனைய தமிழ் அமைப்புகளை ஓரணியில் திரள அழைப்பு விடுக்கும் சூழ்நிலைக் கைதியான சிறீதரனால் யதார்த்தத்தில் அவர் நினைப்பது போல செயற்பட முடியுமா? விரும்புகிறோமோ இல்லையோ அவசியமான நேரத்தில் நியாயமான முறையிலான பேச்சுகளைத்தான் அரசுடன் தொடரமுடியுமா? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினால் முன்வைக்கப்பட்டு இப்போது பரவலாக பேசப்படும் விடயமாக மாறியுள்ள, ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஏனைய தரப்பினருக்கு அக் கட்சியின் புதிய தலைவரின் பதில் தான் என்ன?
எதையும் நாம் எதிர்வுகூறக்கூடியதான ஒரு தெளிவான உறுதியான நிலைப்பாட்டை சிறீதரன் அவர்கள் கடந்த காலத்தில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியதில்லை. மாறாக கட்சிக்குரிய கூட்டுப் பொறுப்பை மீறி, கட்சி வெளிப்படுத்துகின்ற அரசியல் நிலைப்பாடுகளுக்கு முரணாக பேசியும் செயற்பட்டும் வந்த ஒருவராகவே நாம் அவரை அறிந்துள்ளோம்.
கே.என்.ஆர்
22.01.2024
(‘தாயகக்குரல்’ பகுதியானது விமர்சன ரீதியான ஆக்கங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் பகுதியாகும். அதில் பிரசுரிக்கப்படுபவை கட்சியின் உத்தியோகபூர்வமானவை அல்ல)