ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு  உரிய தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சியின் ஆதரவாளர்கள்   கொழும்பிற்கு வருகை தந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த பேரணி இடம்பெறுகிறது. கொழும்பு விகாரமகாதேவி பூங்கா அருகில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது.

”மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் – 2024” எனும் தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கு மூன்று நீதவான் நீதிமன்றங்களினால் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட தடை விதித்து, இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கு கொழும்பு இலக்கம் 04 நீதவானால் இன்று முற்பகல் தடையுத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே,  மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆகியனவும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.

வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாமெனவும் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்குள் உட்பிரவேசிப்பதைத் தவிர்க்குமாறும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதமேற்படுத்த வேண்டாமெனவும் நீதிமன்ற உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.