தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்தியமைக்காக இலங்கை மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட வெல்வேரி பகுதியில் விடுவிக்கப்படாமல் இருந்த குடியிருப்பு காணிகள் தனியார் ஒருவருக்குக் குத்தகைக்கு வழங்கப்படுவதாகத் தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வந்த நிலையில் பின்னர் இடம்பெயர்ந்த 31 குடும்பங்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்தில் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அமைச்சுகள் திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் இன்று (01) பிற்பகல் அந்தந்த நிறுவனங்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட்டன. இதன்போது 19 வாகனங்களை மீள கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு அவற்றில் 15 வாகனங்கள் முன் அறிவித்தலுக்கமைய வருகை தந்திருந்த குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
உடன் அமுலுக்கு வரும் வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக டீஆனு நிலுஷா பாலசூரியவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகமான ஹர்ஷ இலுக்பிட்டிய அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார். அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டுமாயின், சாதாரண கடவுச்சீட்டின் மூலம் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், இராஜதந்திர கடவுச்சீட்டுகள், கொடுப்பனவுகள், தொலைபேசி கொடுப்பனவுகள் உள்ளிட்ட சலுகைகளும் ரத்து செய்யப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.