திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட வெல்வேரி பகுதியில் விடுவிக்கப்படாமல் இருந்த குடியிருப்பு காணிகள் தனியார் ஒருவருக்குக் குத்தகைக்கு வழங்கப்படுவதாகத் தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வந்த நிலையில் பின்னர் இடம்பெயர்ந்த 31 குடும்பங்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்தில் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக விடுவிக்கப்படாமல் உள்ள 42 ஏக்கர் காணியில் 35 ஏக்கர் காணி இவ்வாறு தனியார் ஒருவருக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் எல்லைக் கற்கள் இடப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு தனியார் ஒருவருக்குக் காணி வழங்கப்பட்டது எனவும் முறைப்பாடளித்துள்ள மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பல தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமை காரணமாகவே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டதாக அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.