ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று 7 நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்துள்ளார். அனைத்து நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை பிரகாரம் சந்திப்புகள் அமைந்துள்ளன. இலங்கைக்கான கியூப தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) இன்று காலை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். டெங்கு ஒழிப்புக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக கியூப தூதுவர் உறுதி அளித்தார்.

டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளில் கியூபா பெற்றுள்ள வெற்றிகளை சுட்டிக்காட்டிய கியூப தூதுவர் இலங்கையுடன் டெங்கு ஒழிப்புக்கு அவசியமான பொதுச் சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பான நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்திய தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் சந்தத்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.