இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் Eric Walsh) இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றிக்கு தனதும் கனேடிய அரசாங்கத்தினதும் மக்களினதும் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்த கனேடியத் தூதுவர் ஊழலை ஒழித்து நாட்டில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
ஊழல் மற்றும் பாதுகாப்பின்மையானது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கிய தடையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டிய எரிக் வோல்ஷ் உத்தேச சீர்திருத்தங்களின் மூலம் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான மிகவும் பொருத்தமான சூழல் இலங்கையில் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை தொடர்புபட்டிருப்பது மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கும் கனேடிய அரசாங்கத்தின் முழு ஆதரவை வழங்குவதாகவும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.