இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு இன்று முற்பகல் வருகை தந்திருந்தார். இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் வௌிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். இந்திய வௌிவிவகார அமைச்சருடன் 08 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
வெகுவிரைவில் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இன்று பிற்பகல் முன்வைத்தார் .
ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிக்கும் தருவாயில் நாட்டிற்கு வருகைதர கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் கையளித்து இந்திய – இலங்கை உறவுகளை பல்வேறு துறைகளூடாக பலப்படுத்திக்கொள்வது குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்தார்.
இலங்கையின் சுற்றுலாத்துறை, முதலீடுகள், மின்சக்தி, வலுசக்தி, பால் சார்ந்த உற்பத்தித் துறை என்பவை தொடர்பில் இந்தியா கொண்டிருக்கும் அக்கறையை தௌிவுபடுத்திய அவர் இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும் உறுதியளித்தார்.
அத்துடன் தனது விஜயத்தின்போது பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் முன்னாள் ஜனாபதி ரணில் விக்கிரமசிங்கவினையும் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இந்திய வௌிவிவகார அமைச்சர் தனது இந்த விஜயத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.