எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பல சிரேஷ்டத் தலைவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விலகியுள்ளனர். அவர்களில் மூன்று முன்னாள் ஜனாதிபதிகளும் அடங்குகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மைத்ரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேநேரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கிய செல்வம் அரியநேத்ரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பயன்படுத்தியிருந்த சங்கு சின்னம் இந்த முறை பொதுத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநர் நவீன் திசாநாயக்க அறிவித்துள்ளார்.

கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் ஐக்கியத் தேசியக் கட்சி தரப்பினருக்குப் பாரிய அநீதி ஏற்படுவதாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை அநுராதபுரம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்கவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

எனினும் அரசியலிலிருந்து விலகப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறைப் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசியச் சுதந்திர முன்னணியும் அறிவித்துள்ளது.அத்துடன் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைக்கத் தமது ஆதரவையும் அந்தக் கட்சி வெளிப்படுத்தியுள்ளது.

இதுதவிர ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்லஇ தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்; தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் முன்னாள் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன ஆகியோரும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதுஇ ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ஐக்கிய மக்கள் கூட்டணி மீறியுள்ளதாகத் தெரிவித்து.

ஐக்கியக் குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் எதிர்வரும் பொதுத் தேர்தலிலிருந்து விலகியுள்ளார்.

அதேநேரம் சிரேஷ்ட உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும சமல் ராஜபக்ஷ காமினி லொக்குகே ஜோன் செனவிரட்ன ஆகியோர் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.

முன்னாள் வெளிவிவகார அமைச்சரான அலி சப்ரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாலக கொடஹேவா வினோ நோகராதலிங்கம் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.

இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக அண்மையில் அறிவிப்பை வெளியிட்ட அதன் சிரேஷ்ட உறுப்பினர் மாவை சேனாதிராஜா எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.