மன்னார் – விடத்தல்தீவு பகுதியில் காற்றாலை மின் நிலையத்தை அமைப்பது தொடர்பான இந்திய அதானி நிறுவனத்தின் திட்டத்தை தற்போதைய அமைச்சரவை மீள்பரிசீலனை செய்யத் தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். பிரதி மன்றாடியார் நாயகம் அவந்தி பெரேரா இதனை நீதிமன்றுக்கு அறியப்படுத்தினார்.

குறித்த திட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் இன்று ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இந்த மனுக்களை வனவிலங்கு மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உள்ளிட்ட பலர் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த மனுக்கள் இன்று அழைக்கப்பட்ட போதுஇ அமைச்சரவை செயலாளர் மற்றும் வலு சக்தி அமைச்சர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் உத்தேசக் காற்றாலை மின் திட்டத்தை எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி அமைச்சரவை மீள்பரிசீலனை செய்யத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதன்படி, இலங்கை அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் மற்றும் மனுக்களின் உள்ளடக்கங்களைக் கருத்தில் கொண்டு, உரிய திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும் எனப் பிரதி மன்றாடியார் நாயகம் தெரிவித்தார்.

தற்போதைய இடைக்கால அமைச்சரவையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி மன்றாடியார் நாயகம், அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவிப்பதற்கு கால அவகாசம் கோரினார்.

அதுவரை இந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை உள்ளவாறே தொடரும் எனவும் பிரதி மன்றாடியார் நாயகம் நீதிமன்றத்திற்கு வாய்மொழியாக அறிவித்தார். இந்த விடயங்கள் தொடர்பில் இணக்கம் தெரிவித்த மனுதாரர்களின் சட்டத்தரணிகள்,

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் உத்தேச அமைச்சரவை உறுப்பினர்களைப் பிரதிவாதிகளாக நியமித்து மனுவை திருத்த அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த விடயங்கள் தொடர்பில் அவதானிப்புகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.

உத்தேசக் காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியின் ஊடாக புலம்பெயர்ந்து வரும் பறவைகள் இலங்கைக்கு வரக்கூடிய பாதை அமைந்துள்ளதாக மனுதாரர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பறவைகளின் உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.