தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய இலஞ்ச, ஊழலற்ற செயற்றிறன் வாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை பாராளுமன்றத்தின் ஊடாக வென்றெடுக்கக் கூடியவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என ஆயர் வலியுறுத்தியுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தல் தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ் மக்களால் காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட தமிழ் மக்களின் அடிப்படை கோட்பாடுகளை தொடர்ந்து முன்னகர்த்திச் செல்லக்கூடியவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவினர், நண்பர் போன்ற வட்டங்களை கடந்து செயற்படக்கூடிய தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய இலஞ்ச, ஊழலற்ற செயற்திறன் வாய்ந்தவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டுமெனவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் வலியுறுத்தியுள்ளார்.

உரிமை மறுப்பிற்கு இலக்கான சிறுபான்மை மக்களின் அனைத்து வகையான உரிமைகளையும் பெறுவதற்குரிய வழிமுறையாக அரசியல் காணப்படும் நிலையில், இம்முறை தேர்தலில் போட்டியிடுவோர் அதன் கனதியை உணர்ந்தவர்களா என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனைகள் நிறைந்த காலகட்டம் இதுவென்பதால், ஜனாதிபதித் தேர்தலின் போது தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனையானது வடக்கு, கிழக்கிலும் ஏற்பட வேண்டுமென்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 வருட அகிம்சைப் போராட்டமும் 30 வருட ஆயுதப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டனவோ அந்த காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகளை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை பாராளுமன்றத்தின் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே வாக்களிக்க வேண்டுமெனவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.