வடக்கு மார்க்கத்திலான தொடருந்து சேவை, நாளை மறுதினம் முதல் வழமைக்குத் திரும்பவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ்தேவி தொடருந்து சேவை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அனுராதபுரத்துக்கும் பெலியத்தவுக்கும் இடையிலான ரஜரட்ட ரெஜின தொடருந்து சேவையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் காரியாலயங்கள் ஊடாக அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். நாளை முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இதுவரை 2,447 இலங்கையர்கள் விவசாயத் தொழில்துறைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அந்த தொழில்துறைக்காக மேலும் 61 இலங்கையர்கள் அனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கான பயணச் சீட்டு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பயின்(David Pine) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து கூறிய நியூசிலாந்து உயர்ஸ்தானிகர், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக நாட்டிற்குள் வலுவான மற்றும் பலன் மிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.