எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று(26) 17 வட்டாரங்களில் நடைபெற்ற தேர்தலில் 15 வட்டாரங்களின் வெற்றி தேசிய மக்கள் சக்தி வசமானது. 55,643  வாக்காளர்கள் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 36,825 பேர் வாக்களித்திருந்தனர்.

இது 63 வீத வாக்கு பதிவாகும். செல்லுபடிபற்ற வாக்குகளின் எண்ணிக்கை 520 ஆகும். தேசிய மக்கள் சக்தி 17295 வாக்குகளை பெற்றது.

இதன் பிரகாரம் 15 வட்டாரங்களில் வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்திக்கு 15 ஆசனங்கள் கிடைத்தன.

7924 வாக்குகளை பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி 2 வட்டாரங்களில் வெற்றி பெற்றதுடன் 6 ஆசனங்களை தனதாக்கியது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரனமுன 3597 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 2612 வாக்குகளை பெற்றதுடன் 2 ஆசனங்களைப் பெற்றது.

2568 வாக்குகளை பெற்ற சுயேட்சை குழுவொன்று 2 ஆசனங்களை கைப்பற்றியது.

பொதுஜன ஐக்கிய சுதந்திர கூட்டணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டன.

இதேவேளை, எல்பிட்டிய  பிரதேச சபை தேர்தலில் இரண்டாவது பட்டியலில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபையில் 30 ஆசனங்கள் உள்ளன.

தேர்தல் மூலம் நேரடியாக 17 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய 13 பேரும் இரண்டாவது பட்டியல் ஊடாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்கள் விபரம் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது.