அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு எனது மாலைநேர வணக்கங்கள்.
நாகலிங்கம் இரட்ணலிங்கமாகிய நான் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் என்கின்ற அடிப்படையில் உங்களுடன் எமது கட்சி சார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது வெறும் தேர்தல் போட்டிக்கான ஒரு அமைப்பல்ல. தமிழ் மக்களின் உரிமைக்காகவும், சுதந்திரமான வாழ்வுக்காகவும் செந்நீரையும் கண்ணீரையும் சிந்தி, அளவிடமுடியாத தியாகங்கள் புரிந்த விடுதலைப் போராட்ட அமைப்புகளான புளொட், ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய அமைப்புகளின் கூட்டு முன்னணியாகும்.
வேறுபட்ட தந்திரோபாயங்களின் வழி பயணித்திருந்தாலும், இன்று ஒற்றுமை எனும் அடித்தளத்தில் நின்று தமிழ் மக்களின் குரலாய், அவர்களின் பாதுகாவலராய் செயற்பட்டு வருகிறோம். இன்னமும் அதிக அர்ப்பணிப்புடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்படக் காத்திருக்கிறோம்.
இன்று தெற்கில் நிகழும் மாற்றத்திற்கும், வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்பட வேண்டிய வாழ்வியல் மாற்றங்களுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை புரிந்து கொள்ள முடியாதவர்களால், மாற்றம் என்ற ஒற்றைச் சொல்லின் மாயைக்குள், தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினகளும் மூடி மறைக்கப்படுகின்றன.
வடக்கு கிழக்கில் வாழும் தனித்துவமான தேசிய இனமான தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை ஊழலற்ற சமூக கட்டமைப்பினால் மட்டும் ஏற்படுத்தி விடமுடியாது. சமஷ்டி முறையிலான ஆட்சி அதிகாரப் பகிர்வு மூலமே எமது மக்கள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் பேணும் சமூகமாக மாற முடியும். எமது சமூகத்தின் உள்ளகக் குறைகளைக் களைவதற்குகூட தென்னிலங்கை அரசியல் தலைமைதான் வேண்டும் எனும் சிறுபிள்ளைத்தனமான அபிப்பிராயம் முற்றாகக் களையப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில், எமது மக்களின் தலைவிதியை, பிரதிநிதித்துவத்தை இன்னொரு சமூகத்தால் முன்கொண்டு செல்ல முடியாது. ஒற்றையாட்சித் தத்துவத்திலும், சிங்கள பௌத்த சிந்தனையிலும் வளர்த்தெடுக்கப்பட்டு, மகாசங்கத்தினரின் அறிவுரைக்குள் நின்று செயற்படும் தென்னிலங்கை சிங்களக் கட்சிகளின் தலைமைகளால் ஒருபோதும் அது முடியாது என்பதை நாம் அனைவரும் சந்தேகத்திற்கிடமின்றி உணர வேண்டும்.
நிலைபேறான அபிவிருத்தி, போதைக்கு அடிமையாகாத இளைய சமூகம், ஊழலற்ற அரச நிர்வாகம் என அத்தனை அடிப்படைகளையும் உருவாக்கக்கூடிய அறிவு, ஆற்றல், அனுபவம் அனைத்தும் எம் மக்களிடம் நிறையவே உண்டு.
ஆட்சி மாற்றம் என்பது இன்று எமது நாட்டின் பொதுநலன் சம்பந்தப்பட்டது. அதற்காக எம் இனத்தின் அடிப்படையான உரிமைகளில், நலன்களில் கேள்விக்கிடமின்றி நாம் சமரசம் செய்துகொள்ள முடியாது. எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதன் மூலமே நாட்டின் பொதுவான நலன்களை உறுதி செய்யமுடியும் எனும் உறுதியான நிலைப்பாட்டுடனேயே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயற்பட்டு வருகிறது.
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடமான வடக்கு கிழக்கு பிரதேசங்களில், தமிழர் தரப்பில் உள்ள ஒரே ஒரு கூட்டு அணியாக, கூட்டமைப்பாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தனது சங்கு சின்னத்தில் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஒற்றைப் பிரதிநிதித்துவத்தையாவது பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில், நாம் முழுமையான அர்ப்பணிப்புடனும் விட்டுக்கொடுப்புடனும், தமிழரசுக் கட்சியுடன் பேச்சுக்களை நடாத்தினோம்.
திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலும், அம்பாறையில் எமது கட்சியின் சங்குச் சின்னத்திலும் ஒற்றுமையாக வேட்பாளர்களை நிறுத்துவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீட உறுப்பினர்கள் தமது இணக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அதற்கிணங்க, திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து அங்கு வேட்புமனுவை தாக்கல் செய்ய முடிந்தது. ஆனாலும் அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகளால் அங்கு தனித்து வேட்புமனுவை தாக்கல் செய்ய நாம் நிர்பந்திக்கப்பட்டோம்.
தென்னிலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் கொழும்பு மாவட்டத்தில், எமது கூட்டணியில் இணைந்து போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் அங்கு போட்டியிடுவதை நாம் தவிர்த்திருந்தோம். அனைத்துக் காலங்களிலும் எமது மக்களின் அரசியல் மற்றும் அன்றாடப் பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றிலும் அதற்கு வெளியேயும் எம்மோடு இணைந்து நின்று குரல் கொடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களை பலவீனப்படுத்த நாம் விரும்பவில்லை.
தமிழர்களாகிய நாம், இலங்கைத் தீவில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட, மரபு வழியான வாழ்விடத்தை தாயகமாகக் கொண்ட, தனித்துவமிக்க பண்பாட்டைக் கொண்ட ஒரு தேசிய இனமாக வாழுகின்றோம்.
ஆனாலும், இலங்கை நாடு என்பது, பல இன, பல மத, பல மொழி, பல கலாசாரங்களைக் கொண்ட ஒரு தீவு என்பதை உணர்ந்து இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள சிங்கள மக்களின் தலைவர்கள் மறுத்ததன் விளைவே தேசிய இனப்பிரச்சினை தோற்றம் பெற்றதும் அது கூர்மை அடைந்ததுமாகும்.
தமிழர் தேசத்தின் இருப்பையும் தனித்துவத்தையும் அழிக்கும் உள்நோக்கத்தோடு தென்னிலங்கை அரசுகள் திட்டமிட்டு முன்னெடுத்த இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் முதலில் சாத்வீக வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் போராடினார்கள். அப்போராட்டங்களை மிக மூர்க்கத்தனமாக அடக்கி ஒடுக்கியதன் கொடிய விளைவே இறுதிப் போரில் நிகழ்ந்த உச்சமான இன அழிப்பாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் வேகமாக சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையில் சிங்கள பௌத்தமயமாக்கலும் நிலப்பறிப்பும் தொடர்கின்றன. 3000 ற்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கான கால்நடை சார்ந்த பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு மயிலத்தமடு, மாதவனை போன்ற இடங்களில் உள்ள மேய்ச்சல் தரைகள் படையினரின் அனுசரணையோடும், பாதுகாப்போடும் வெளி மாவட்ட விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில், கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவை முழுமையான ஒரு பிரதேச செயலர் பிரிவாகத் தரம் உயர்த்துமாறு அங்குள்ள தமிழ்மக்கள் நான்கு தசாப்தங்களாக போராடி வருகிறார்கள். இன்றுவரை ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை, தீர்க்க விரும்பவுமில்லை. மாறாக அங்குள்ள இரண்டு சிறுபான்மை சமூக மக்களையும் மாறி மாறி வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றி இனங்களுக்கிடையேயான குரோதத்தை மேலும் மேலும் வளர்க்கும் கைங்கரியத்தையே செய்து வருகின்றன.
வடக்கு மாகாணத்தின் வன்னி மாவட்டங்களில் குருந்தூர் மலை, வெடுக்கு நாறிமலை, செம்மலையின் நீராவியடி ஆகிய இடங்களில் தமிழ் மரபுரிமைச் சின்னங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் அரச திணைக்களங்களும் பௌத்த பிக்குகளும் அரச படையினரும் இணைந்து பௌத்த கட்டுமானங்களை நீதிமன்றத் தீர்ப்புகளை உதாசீனம் செய்தே உருவாக்கி வருகிறார்கள்.
வவுனியா மாவட்டத்தின் தெற்கெல்லையில் கொக்கச்சான்குளம் என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் கிராமம் இராணுவத்தின் பாதுகாப்புடனும் அரச அனுசரணையுடனும் ஆக்கிரமிக்கப்பட்டு ‘கலாபோகஸ்வேவ’ என்ற பெயருடைய சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு, மிகக்குறுகிய காலத்துக்குள் 5000 ற்கும் அதிகமான தென்னிலங்கைச் சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்பட்டதுடன் வவுனியா மாவட்டத்தின் இனப் பரம்பல் திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் குடியிருப்புப் பகுதிகளிலும், விளை நிலங்களிலும், கரையோரத்திலும் படைத்தரப்பு தனது முகாம்களை அமைத்திருக்கும் பெரும்பாலான காணிகள் தனியாருக்குரியவை. இவற்றுள் மிகச்சிறிய நிலப்பரப்புத்தான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்திலும் தமிழர் மரபுரிமைச் சொத்துக்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டுள்ளன. நாவற்குழியில் அரசின் அனுசரணையோடு ஒரு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்தர்கள் எவரும் இல்லாத தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக ஒரு புதிய விகாரை படையினரால் கட்டப்பட்டுவிட்டது.
வடக்கு மாகாணத்தின் கடற்றொழிலாளர்களுக்குரிய கடல் வளம் அழிக்கப்படுகின்றது. அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது. இந்திய இழுவை மடிப் படகுகளாலும், உள்ளூர் இழுவை மடித் தொழிலாலும், சட்டவிரோதமான மீன்பிடி முறைகளாலும், மீனவக் கிராமங்களில் படைத்தரப்புகள் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளாலும் வட கடல் மீதான உரிமையை இழந்தும், கடல் வளங்களை இழந்தும், தமது வாழ்வாதாரங்களை இழந்தும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் 46,000 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் முடிவடைந்த நிலையிலும்கூட சிறைகளில் மிக நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மாறாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதைக் காண முடிகிறது. தமிழ் மக்களின் அரசுக்கு எதிரான செயற்பாடுகளைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்கக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் உச்ச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. யுத்தம் முடிந்ததும் புனர்வாழ்வளிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 15 ஆண்டுகளின் பின்னரும் அச்சுறுத்தல்களின் மத்தியிலேயே வாழ்ந்து வருகிறார்கள். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசியற் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.
யுத்தம் முடிவடைந்த பின்னரான கடந்த 15 வருட காலத்தை இன நல்லிணக்கத்துக்கு பயன்படுத்துவதற்கு விடுத்து, தமிழர் சமூகத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளுக்கே அரசாங்கங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்துள்ளதோடு, அதனை ஒவ்வொரு அரசாங்கங்களும் தமது கொள்கையாகவும் முன்னெடுத்து வந்துள்ளன.
தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அதேவேளை நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைதான் உண்டு என்ற பொய்யான தோற்றத்தைக் கட்டியெழுப்பி சர்வதேச சமூகத்தை நம்ப வைக்க தென்னிலங்கை அரசாங்கங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண மறுத்து ஒரு தேசிய இனத்துக்கு எதிரான யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்த காரணத்தாலேயே நாடு வங்குரோத்தாகியது என்பதையும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் யுத்தத்திற்காக வாங்கிய கடன் சுமைதான் என்பதையும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஆதரவான சர்வதேச சக்திகளும் விளங்கிக் கொள்ள மறுக்கின்றனர்.
யுத்த தளபாடங்களுக்காக 25000 கோடி அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ள இலங்கை அரசினால், யுத்தத்துக்காகப் படையினரின் எண்ணிக்கை பல இலட்சங்களாக அதிகரிக்கப்பட்டது. இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் நாற்பது சத விகிதம் படையினருக்கே செலவழிக்கப்படுகிறது. இலங்கைத்தீவின் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மொத்தச் சம்பளத்தில் ஏறக்குறையச் சரிபாதியளவு படையினருக்கான சம்பளமாக வழங்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளிலும் படைத்தரப்பின் ஆட்தொகை குறைக்கப்படவில்லை. அதாவது இராணுவமயமாக்கல் தளர்த்தப்படவில்லை. மாறாக, தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில், தமிழர் பிரதேசத்தை சிங்கள பௌத்த மயப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக படைத்தரப்பு பெருஞ் செலவில் தொடர்ந்தும் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான ஒரு மிகவும் பின்னடைவான நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வையும் நம்பிக்கையையும் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். அதேசமயம் இனப்பிரச்சினைக்கான விரைவான தீர்வின் அவசியத்தை தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நிராகரிக்கப்பட முடியாத விதத்தில் உணர்த்த வேண்டியதும் அவசியமாகும்.
தேசிய இனப் பிரச்சினையைப் பேசுபொருளாக்கி அதன்மீது தென்னிலங்கை மக்களின் கவனத்தையும் உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கத்தோடு, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினராகிய நாம், எம்மக்களின் இன நலன்களைப் பேணும் நோக்குடன், நாடாளுமன்றத் தேர்தலில் தகுதியான வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளோம்.
தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்காகவும், தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருமித்த குரலில் ஒலிக்கச் செய்வதற்காகவும், நிரந்தரமான அரசியல் தீர்வை கோரவும், அதற்கான அழுத்தங்களை தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகளூடாகவும் சர்வதேச சக்திகளூடாகவும் மேற்கொள்ளவும், இத்தேர்தலை ஒரு வாய்ப்பாக நாம் கையாள விரும்புகிறோம்.
மேற்கூறப்பட்ட காரணங்களில் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினராகிய நாம், தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தலாம் எனும் அடிப்படையில், இலங்கைத் தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும்,
இரண்டாவதாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பூர்வீகப் பிரதேசங்களை ஒன்றிணைத்ததாக அமைய வேண்டும் எனவும் தென்னிலங்கை மக்களுக்கும், அவர்களது அரசியல்வாதிகளுக்கும், அரசாங்கத்திற்கும் அறைகூவல் விடுக்கிறோம்.
இதுவே, தங்களதும் பொது நிலைப்பாடு என்று தென்னிலங்கைக்கும், சர்வதேச சமூகத்துக்கும் வெளிக்காட்ட தமிழ் மக்கள் அனைவரும் சங்குச் சின்னத்துக்கு வாக்களித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.