நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கனடாவின் வர்த்தகர்களுக்கு இலங்கை வணிக சபை பிரதிநிதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இது தொடர்பாக தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் கனடாவில் இடம்பெற்றதாக இலங்கை வணிக சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி, பசுமை விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்வது குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில் சீன அரசாங்கம் இலங்கையின் புதிய அரசாங்கத்தினது அபிவிருத்தி தேவைப்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செயற்படவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் ச்சி ஜென்ஹொங் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகிறது.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சுங்க நடவடிக்கைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பீ.பி.எஸ்.நோனிஸ் மற்றும் ரஷ்ய சுங்க சேவையின் பிரதானி வீ.ஐ.பிகலோவில் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக செயற்பாடுகளின் போது சுங்க நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்க வகையில் முன்னெடுக்கும் நோக்கில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான மனிதாபிமான உதவித்தொகையை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீன தூதரகம் தனது உத்தியோகபூர்வ ஓ பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இது அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வெள்ள அனர்த்தத்திற்காக வழங்கப்பட்ட 100இ000 அமெரிக்க டொலர் உதவிக்கு மேலதிகமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். பதிவு செய்யப்படாத அதிசொகுசு காரொன்று மிரிஹானையிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சில பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து நேற்று மாலை முதல் இரவு 10 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.