அனைத்து தொடருந்து மார்க்கங்களிலும் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையே தொடருந்து ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொம்பனிதெரு தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று தடம் புரண்டது. Read more
இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரஜைகளுக்கு அறுகம்பை பகுதிக்கு செல்லும்போது அவதானமாக செயற்படுமாறு மாத்திரமே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர். வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மன்னார் மாவட்ட தோழர்களின் ஒன்று கூடல் – 27.10.2024
எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று(26) 17 வட்டாரங்களில் நடைபெற்ற தேர்தலில் 15 வட்டாரங்களின் வெற்றி தேசிய மக்கள் சக்தி வசமானது. 55,643 வாக்காளர்கள் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 36,825 பேர் வாக்களித்திருந்தனர்.
நாட்டிற்கு திரும்பிச்செல்லும் எதிர்பார்ப்பிலுள்ள இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகுவதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போதைய மோதல் நிலைமைக்கு மத்தியில் பாதுகாப்பின்மையை உணரும் பட்சத்தில் மீண்டும் நாட்டிற்கு திரும்பிச்செல்வதற்காக பதிவு செய்ய முடியுமென தூதரகம் அறிவித்துள்ளது. இதற்காக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் இன்றும் திறக்கப்பட்டுள்ளது.
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 2 ரஷ்யப் பிரஜைகள் கண்டி – ஹந்தானையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கண்டி சுற்றுலா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 39 மற்றும் 32 வயதான தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கு மார்க்கத்திலான தொடருந்து சேவை, நாளை மறுதினம் முதல் வழமைக்குத் திரும்பவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ்தேவி தொடருந்து சேவை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அனுராதபுரத்துக்கும் பெலியத்தவுக்கும் இடையிலான ரஜரட்ட ரெஜின தொடருந்து சேவையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் காரியாலயங்கள் ஊடாக அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். நாளை முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இதுவரை 2,447 இலங்கையர்கள் விவசாயத் தொழில்துறைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அந்த தொழில்துறைக்காக மேலும் 61 இலங்கையர்கள் அனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கான பயணச் சீட்டு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.