2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். அத்துடன் கசிந்ததாக உறுதிசெய்யப்பட்ட 3 வினாக்களுக்கான முழுமையான புள்ளிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பரீட்சையினை மீண்டும் நடத்துவதற்கான தேவைப்பாடு இல்லை.

பரீட்சை குளறுபடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் கண்டறியப்பட்ட 5, 13 மற்றும் 27 ஆம் இலக்க வினாக்களுக்கான புள்ளிகளை அனைத்து மாணவர்களுக்கும் முழுமையாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வினாக்களுக்கான விடைகளை எழுதினாலும் எழுதாவிட்டாலும் அதற்கான புள்ளிகள் வழங்கப்படும். இதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளின் சில கேள்விகள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து பரீட்சைகள் திணைக்களமும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.

அத்துடன் பரீட்சையை மீண்டும் நடத்துவதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதற்காக 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்குக் கல்வி அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கமைய குறித்த குழு இன்று முற்பகல் கூடிய நிலையிலேயே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட விடைத்தாள்களை மதிப்பிட்டுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஆகியோர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.