சர்வதேச பொருளாதாரத்தில் மாற்று அணியாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரிக்ஸ்(BRICS) அமைப்பின் வருடாந்த மாநாடு ரஷ்யாவின் தலைமையில் இன்று ஆரம்பமாகின்றது. ரஷ்யாவின் Kazan நகரில் இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு இடம்பெறுகின்றது. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவின் தலைமையிலான குழு நேற்று ரஷ்யாவிற்கு பயணித்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு பதிலாக பிரிக்ஸ் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் உரை நிகழ்த்தவுள்ளார்.
இலங்கையை பிரிக்ஸ் அமைப்பில் இணைப்பதற்கான விண்ணப்ப நடைமுறைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை வௌிப்படுத்தியுள்ள அக்கறை தொடர்பில், இலங்கை ஜனாதிபதியால் ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கியுள்ளன.
குறித்த நாடுகளுக்கு மேலதிகமாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளும் அதன் உறுப்பு நாடுகளாக கருதப்படுகின்றன.
இந்தியப் பிரதமர், சீன ஜனாதிபதி மற்றும் ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட அரச தலைவர்கள் இம்முறை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.