ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)
நாடாளுமன்றத் தேர்தல் – 2024
தேர்தல் விஞ்ஞாபனம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (telo), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (dplf), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (eprlf), தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய போராட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து பயணிக்கும் ஓர் அரசியல் கூட்டமைப்பாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில், பல தமிழ் அமைப்பினரும் ஒன்றிணைந்து பலமான அரசியல் கட்டமைப்பாக, கடந்த 2001ஆம்ஆண்டிலிருந்து பயணித்து வந்தோம். ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பலமான ஜனநாயக கட்டமைப்புகளுடனான அரசியல் கட்சியாக உருவாக்குவதில் ஏற்பட்ட திட்டமிட்ட தடைகள் காரணமாகவும், கூட்டமைப்புக்குள் காணப்பட்ட எதேச்சதிகாரப் போக்குகள் காரணமாகவும் தமிழரசுக் கட்சியின் தவறான கொள்கை காரணமாகவும் வௌ;வேறு காலகட்டங்களில் சில கட்சிகள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தன.

இறுதியாக, 2023இல் அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசுக்கட்சி தனது வீட்டு சின்னத்தில் தனித்து போட்டியிடுவதாக தீர்மானித்து, அறிவித்ததோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.

பல்லாயிரக்கணக்கான தியாகங்களின் ஊடாக கட்டியெழுப்பப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் இயக்கமும், முக்காலத்திற்குமான தமிழ் மக்களின் உச்சபட்ச எதிர்பார்ப்பாகவுள்ள ஒற்றுமையும் ஒன்றுசேர சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனும் உறுதியான தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ் தேசியப் பரப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் மேற்கண்ட கட்சிகள் இணைந்து கூட்டமைப்பாக பயணிப்பது எனவும் தீர்மானித்தோம். அக் கூட்டணிக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்று பெயரிடப்பட்டது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளும், தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சிவில் அமைப்புகளின் கூட்டும் இணைந்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பாக செயற்பட்டோம். அந்த பொதுக் கட்டமைப்பானது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது.

மிகக் குறுகிய கால அவகாசத்தில் தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்குகளைப் பதிவு செய்து தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளையும், அதற்கு அவசியமான ஒற்றுமையையும் சங்கு சின்னத்தின் ஊடாக உலகறியச் செய்தனர். இதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் சங்கு சின்னத்தில் தொடர்ந்து பயணிப்பதாக முடிவு செய்தோம்.

இன்று, தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பிரதேசங்களில், தமிழர் தரப்பில் உள்ள ஒரே ஒரு கூட்டணியான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, சங்கு சின்னத்தில் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஒற்றைப் பிரதிநிதித்துவத்தையாவது பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில், நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் தமிழரசுக்கட்சியுடன் பேச்சுக்களை நடாத்தினோம். திருகோணமலையில் வீட்டுச் சின்னத்திலும், அம்பாறையில் சங்குச் சின்னத்திலும் ஒற்றுமையாக வேட்பாளர்களை நிறுத்துவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைமை உறுப்பினர்கள் தமது இணக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அதற்கிணங்க, திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து வேட்புமனுவை தாக்கல் செய்ய முடிந்தது. ஆனால் தமிழரசுக் கட்சியானது தனது சுயநலமான போக்கின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது. இதன் காரணமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தனித்துப் போட்டியிட நிர்ப்பந்திக்கப்பட்டது.

தென்னிலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் கொழும்பு மாவட்டத்தில், எமது கூட்டணியில் இணைந்து போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்திருந்த போதிலும் அங்கு போட்டியிடுவதை நாம் தவிர்த்திருந்தோம். யுத்த காலங்களில் மட்டுமல்லாது அதற்குப் பின்னரும் எமது மக்களின் அரசியல் மற்றும் அன்றாடப் பிரச்சினைகளில் நாடாளுமன்றிலும் அதற்கு வெளியேயும் எம்மோடு தோளோடு தோள் நின்று குரல் கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளை பலவீனப்படுத்துகின்ற எத்தகைய செயற்பாடுகளிலும் நாம் ஈடுபடலாகாது எனும் தெளிவான, உறுதியான சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தோம்.

தமிழ்த் தேசிய இனமானது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக பல்வேறு வழிமுறைகளில் தனது விடுதலைக்காகப் போராடி வருகிறது. தமிழர்களாகிய நாம ;இலங்கைத்தீவில் தனித்துவம் மிக்க ஒரு தேசிய இனமாக வாழ்ந்து வருகிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட, மரபுவழியான வாழ்விடத்தை தாயகமாகக் கொண்ட, தனித்துவமிக்க பண்பாட்டைக் கொண்ட ஒரு தேசமாக வாழுகின்றோம்.

ஆனாலும், இலங்கைத் தீவானது பல இன, பல மத, பல மொழி, பல கலாசாரங்களைக் கொண்ட ஒரு தீவு என்பதை உணர்ந்து இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் விளைவே தேசிய இனப் பிரச்சினை தோற்றம ;பெறுவதற்கும் அது கூர்மை அடைவதற்கும் இறுதியில் விஸ்வரூபம் எடுப்பதற்குமான மூல காரணமாகும்.
தமிழ் மக்களுடைய இருப்பை அழிக்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளே இன அழிப்பு நடவடிக்கையாகும். தமிழர் தேசத்தின் இருப்பையும் தனித்துவத்தையும் அழித்து பெரும்பான்மை இனத்துடன் அதனைக் கரைக்கும் உள்நோக்கத்தோடு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது திட்டமிட்டு முன்னெடுத்த இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் முதலில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் போராடினார்கள். அப் போராட்டங்களை நிர்மூலமாக்கும் குறிக்கோளோடு ஏவிவிடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் மிகக்கொடிய விளைவே இறுதிப்போரில் நிகழ்ந்த உச்சமான இனஅழிப்பாகும்.

இதன் அடிப்படையிலேயே, உலகின் மிகப் பெரிய தமிழ் சட்டமன்றமாகிய தமிழக சட்டமன்றம், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றது இனஅழிப்பு என்ற ஏகமனதான தீர்மானத்தை நிறைவேற்றியது. எமது வடக்கு மாகாணசபையும் நடைபெற்றது இனஅழிப்பு என்று ஏகமனதான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள் சபைகளிலும், உள்ளுராட்சி அமைப்புகளிலும் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் வேகமாக சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 26 க்கும் அதிகமான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பாரம்பரிய தமிழ்க் கிராமங்களை சிங்கள மாவட்டங்களுடன் இணைப்பதன் மூலம் வடக்கையும் கிழக்கையும் துண்டாடும் திட்டங்கள் நடைமுறைப படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல நீதிமன்றத் தீர்ப்புகளை மீறியே நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையில் ஒருபுறத்தில் சிங்கள பௌத்த மயமாக்கல் வேகமாக நடந்து வருகிறது. இன்னொரு புறத்தில் நிலப்பறிப்பு தொடர்கிறது. 3000ற்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கான கால்நடை சார்ந்த பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு மயிலத்தமடு, மாதவனை போன்ற இடங்களில் உள்ள மேய்ச்சல் தரைகளை அரச அனுசரணையோடும், பாதுகாப்போடும் வெளிமாவட்ட சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். அங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன. வாகரை மற்றும் கதிரவெளிப் பிரதேசங்களில் பிரதேசமக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும் பாதிக்கும் கனிமவள அகழ்வுகளும் சட்ட விரோத இறால் பண்ணைகளும் மக்களின் எதிர்ப்பை மீறியே முன்னெடுக்கப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில், கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவை முழுமையான ஒரு பிரதேச செயலர் பிரிவாகத் தரம் உயர்த்துமாறு அங்குள்ள தமிழ் மக்கள் நான்கு தசாப்தங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இன்றுவரை ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லை. மாறாக அங்குள்ள சிறுபான்மையின மக்களை மாறி மாறி ஏமாற்றி இனப்பகைமையினை மேலும் மேலும் வளர்க்கும் கைங்கரியத்தையே செய்துவருகின்றன.

வடக்கு மாகாணத்தின் வன்னி மாவட்டங்களில் குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, நீராவியடி ஆகிய இடங்களில் தமிழ் மரபுரிமைச் சின்னங்கள் அமைந்திருக்கும் சிறு மலைகளில் அரச திணைக்களங்களும் பிக்குகளும் அரசபடையினரும் இணைந்து பௌத்த கட்டுமானங்களை உருவாக்கி வருகிறார்கள். அங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகளை உதாசீனம் செய்தே அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவ்வாறான நிலைக்கு வெட்கப் படவேண்டிய, வருத்தப் படவேண்டிய அரசாங்கம் அவரைத் தனிப்பட்ட முறையில் சிறுமைப்படுத்தியது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 67 பௌத்த விகாரைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் மற்றும் இராணுவம் இடையிலான விகிதம் 2:1 ஆக இன்னமும் இருக்கின்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட படைமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான்குளம் என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் கிராமம் இராணுவத்தின் பாதுகாப்புடனும் அரச அனுசரணையுடனும் ஆக்கிரமிக்கப்பட்டு ‘கலாபோகஸ்வேவ’ என்ற பெயருடைய சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு, மிகக் குறுகிய காலத்துக்குள் 5000ற்கும் அதிகமான தென்னிலங்கை மக்கள் அழைத்துவரப்பட்டு குடியமர்த்தப்பட்டதுடன் வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பல் திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குடியேற்றக் கிராமத்துக்குத் தேவையான சகல உட்கட்டுமான வசதிகளும் அரச தரப்பினரால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் கனிமவளங்கள் பறிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பேசாலை, விடத்தல்தீவு, தள்ளாடி, பூநகரி பிரதேசங்களில், பொருளாதார அபிவிருத்தியின் பேரால் மக்களின் எதிர்ப்பைமீறி அனைத்தும் முன்னெடுக்கப்படுகின்றன. முள்ளிக்குளம் கிராமத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிறீலங்கா கடற்படையானது அக்கிராமத்தின் பூர்வகுடிகளான தமிழ்மக்களை அங்கு முழுமையாக மீளக்குடியமர விடாமல் தடுத்துவருகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் விளைநிலங்களிலும், கரையோரத்திலும் படைத்தரப்பு தனது முகாம்களை அமைத்திருக்கும் பெரும்பாலான காணிகள் தனியாருக்குரியவை. இவற்றுள் மிகச்சிறிய நிலப்பரப்பே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திலும் தமிழர் மரபுரிமைச் சொத்துக்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டுள்ளன. நாவற்குழியில் அரசின் அனுசரணையோடு ஒரு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்தர்கள் எவரும் இல்லாத தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக ஒரு புதிய விகாரை படையினரால் கட்டப்பட்டுவிட்டது.

தமிழர் தாயகப் பிரதேசத்தின், குறிப்பாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்குரிய கடல்வளம் அழிக்கப் படுகின்றது. அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது. இந்திய இழுவைப் படகுகளாலும், உள்ளுர் இழுவைமடித் தொழிலாலும், தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்புகளாலும், சட்ட விரோதமான மீன்பிடிமுறைகளாலும், மீனவக் கிராமங்களில் படைத்தரப்புகள் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளாலும் கடல் மீதான உரிமையை இழந்தும், கடல் வளங்களை இழந்தும், தமது வாழ்வாதாரங்களை இழந்தும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் 46,000 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் தாயகமெங்கும், தமிழர்களையும் அவர்களது மண்ணையும் வளங்களையும் கூறுபோடும் வகையில், வனவளத் திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் கனிமவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களும், அரசின் நிர்வாகக் கட்டமைப்புக்குள் அடங்காத மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து, காடுகளின் பாதுகாப்பு, வன உயிரினங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் காணிகள், பயிர்ச் செய்கை நிலங்கள், வணக்கத் தலங்கள் உள்ளடங்கிய பல்லாயிரக் கணக்கான ஏக்கர்கள் அளவு நிலங்களை அபகரித்து வைத்துள்ளன.

யுத்தம் முடிவடைந்த நிலையிலும்கூட சிறைகளில் மிக நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மாறாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதைக் காணமுடிகிறது. தமிழ் மக்களின் அரசுக்கு எதிரான செயற்பாடுகளைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்கக் கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும், பல்வேறுபட்ட சர்ச்சைகளுக்கு மத்தியிலும், உச்ச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. யுத்தம் முடிந்ததும் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 15 ஆண்டுகளின் பின்னரும் அச்சுறுத்தல்களின் மத்தியிலேயே வாழ்ந்து வருகிறார்கள். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசியற் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவருகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகிய கடந்த ஓகஸ்ட் முப்பதாம் திகதியன்று திருகோணமலையில் நடந்த எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட உறவினர்கள் மற்றும் அரசியற் செயற்பாட்டாளார்கள் மீது அரச பயங்கரவாதமானது போலீஸ் நடவடிக்கை என்ற வடிவத்தில் ஏவிவிடப்பட்டது. நீதிமன்ற கட்டளையின் கீழான இச்சட்ட நடவடிக்கை மூலம் அப் பேரணி குலைக்கப்பட்டது.

இவ்வாறான நடவடிக்கைகள் யாவும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாத தன்மையைக் கொண்டவை. சிறீலங்கா அரசு என்ற மையத்திலிருந்து உள்நோக்கத்துடன் திட்டமிடப்படுகின்றவை. தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் ஆக்கிரமிப்பைப் பகலில் சட்டரீதியாக செய்கின்றன. பிக்குகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கிறார்கள். அவர்கள் சட்டத்தையோ நீதிமன்றத்தையோ காவல்துறையையோ மதிப்பதில்லை. படையினர் இரவுகளில் பௌத்த கட்டுமானங்களை இரகசியமாகக் நிர்மாணிக்கின்றார்கள்.

நிலப்பறிப்பு, சிங்கள பௌத்த மயமாக்கல், அரசின் அனுசரணையுடனான குடியேற்ற நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளில் படைத்தரப்பு முழுமையாக பயன்படுத்தப் படுகின்றது. வடக்கு கிழக்கில் மட்டும் 65,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு படையினரால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறான கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புச் செயற்பாடுகள் தமிழர் தாயகமெங்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் தாயகத்தின் நிலத்தொடர்ச்சியைத் துண்டாடுவது, இன விகிதாசாரத்தைக் குறைப்பது, நிலத்தைப் பறிப்பது, தமிழ் மரபுரிமைச் சின்னங்களை அழிப்பது, அங்கே சிங்கள பௌத்த மரபுச் சின்னங்களை ஸ்தாபிப்பது போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் வௌ;வேறு வடிவங்களாகவே அமைகின்றன.

சுருக்கமாக சொல்வதெனில், யுத்தம் முடிவடைந்த பின்னரான கடந்த 15 வருட காலத்தை இன நல்லிணக்கத்துக்கு பயன்படுத்துவதற்குப் பதிலாக, தமிழர் சமூகத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் நிலப்பறிப்புக்கும் சிங்கள பௌத்தமயமாக்கலுக்குமே அரசு பயன்படுத்தி வந்துள்ளதோடு, அதனை ஒவ்வொரு அரசாங்கங்களும் தமது கொள்கையாக முன்னெடுத்து வந்துள்ளன.

இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அதேவேளை, நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை மட்டும்தான் இருக்கிறது என்ற பொய்யான தோற்றத்தைக் கட்டியெழுப்பி பன்னாட்டு சமூகத்தை நம்பவைக்க சிங்கள பௌத்த அரசாங்கங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண மறுத்து இனஅழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்த காரணத்தாலேயே நாடு வங்குரோத்தாகியது. இப்பொழுது நாட்டை பிடித்துலுப்பும் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் யுத்தத்திற்காக வாங்கிய கடன்சுமைதான் என்பதை தென்னிலங்கையும் அதனைத் தாங்கிப் பிடிக்கின்ற சர்வதேச சக்திகளும் விளங்கிக் கொள்ளவேண்டும்.

தென்னிலங்கையின் சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும், பொருளாதார நெருக்கடி எனப்படுவது இனப்பிரச்சினையின் விளைவுதான் என்பதனை மூடிமறைக்க முயல்கின்றனர். இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணாமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கமுடியாது என்ற ஆழமான உண்மையை எந்தவொரு அரசாங்கமும் அதன் உறுப்பினர்களும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை.

யுத்த தளபாடங்களுக்காக, முன்பிருந்த அரசாங்கங்கள் 25000 கோடி அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த ஒரு நிபுணரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைச் செலவழித்து முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட உயிரழிவு, பொருள் அழிவு குறித்து இதுவரையிலும் உத்தியோகபூர்வ மதிப்பீடு எதுவும் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை. அந்த அழிவுகளில் இருந்து தமிழ்மக்களை மீட்டெடுப்பதற்கான எந்தவொரு செயல்திட்டமும் இன்றுவரையிலும் உருவாக்கப்படவுமில்லை.

யுத்தத்துக்காகப் படையினரின் எண்ணிக்கை பல இலட்சங்களாக அதிகரிக்கப்பட்டது. இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் நாற்பது வீதம் படையினருக்கே செலவழிக்கப்படுகிறது. இலங்கைத் தீவின் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மொத்தச் சம்பளத்தில் ஏறக்குறையச் சரிபாதியளவு படையினருக்கான சம்பளமாக வழங்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளிலும் படைத்தரப்பின் ஆட்தொகை குறிப்ப்பிடத் தக்களவு குறைக்கப்படவில்லை. அதாவது இராணுவமயநீக்கம் நிகழவில்லை. மாறாக, தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்தமயப்படுத்தும் நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றுவதற்காக படைத்தரப்பு பெருஞ்செலவில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான இராணுவப் பொருளாதாரச் சூழலுக்குள் புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்யத் தலைப்படமாட்டார்கள். தற்போதைய காலங்களிலும் அதிகரித்த அளவில் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள். தற்போது புலம்பெயர்பவர்கள் படித்தவர்கள், சமூகத்தில் பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களாவர். இவ்வாறாக தலைமை தாங்கும் தகைமையுள்ள படித்தவர்கள் சமூகத்தில் இருந்து வெளியேறுவது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் வாழ்வியலில் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

இப்பொழுது புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக அவர்களும் தேசிய மக்கள் சக்தி என்ற அவரது கட்சியும் இலங்கையில் ஊழலும், பொருளாதாரப் பிரச்சினையும் மாத்திரம்தான் இருக்கிறது, வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை என்ற பொய்யான பிம்பத்தைக் காட்டவே முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வையும் நம்பிக்கையையும் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். அதேசமயம் இனப் பிரச்சினைக்கான தீர்வின் அவசியத்தையும் அவசரத்தையும் தென்னிலங்கைக்கும் உலக சமூகத்துக்கும் நிராகரிக்கப்பட முடியாத விதத்தில் உணர்த்த வேண்டியதும் அவசியமாகும்.

தமிழ் மக்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள் மட்டும்தான் உண்டு என்று ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தொடர்ச்சியாக கூறிவரும் ஒரு பின்னணியில், தேசிய இனப் பிரச்சினையைப் பேசுபொருளாக்கி அதன்மீது தென்னிலங்கையின் கவனத்தையும் உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கத்தோடு, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினராகிய நாம் ஒற்றுமையுடன், எம்மக்களின் இன நலன்களைப் பேணும் நோக்குடன், எதிர்வரும் நாடாளுமன்றத ;தேர்தலில் வடக்கு கிழக்கு தாயகம் எங்கும் தகுதியான வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளோம்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களில் ஒருபிரிவினர் ஏதாவது ஒரு தென்னிலங்கை கட்சியின் தமிழ் வேட்பாளருக்கு அல்லது சகோதர இனவேட்பாளருக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள். இவர்களில் வென்றவர்களும் சரி தோற்றவர்களும் சரி இன்றுவரையிலும் இனப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒருதீர்வைத் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் ஊடாக தரவும் இல்லை. இன அழிப்புச் செயற்பாடுகளை நிறுத்தவுமில்லை.

எமது கூட்டணியில், நாம் தமிழ் மக்களை ஓரணியாகத் திரட்டுவோம். அதேசமயம், இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய தமிழ் மக்களின் உறுதியான கோரிக்கையை சர்வதேச சமூகத்துக்கும் தென்னிலங்கைக்கும் வெளிப்படுத்துவோம். இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியையும் கோருவோம்.

இந்த அடிப்படையில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியானது இனப் பிரச்சனைக்கான நிரந்தரதீர்வானது பின்வரும் அடிப்படைகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று உறுதியாக வலியுறுத்துகின்றது.

1- இனப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு உருவாக்க வேண்டிய இலங்கைத் தீவின் புதிய யாப்பானது தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2- தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான் இலங்கைத்தீவின் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்தலாம். எனவே புதிய யாப்பானது இலங்கைத்தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில், அதாவது புதிய யாப்பானது இலங்கைத்தீவு ஒரு பன்மைத் தேசிய அரசாகக் (Plurinational State) கட்டமைக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும்.

3- தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த வடக்குகிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பூர்வீகப் பிரதேசங்களை ஒன்றிணைத்ததாக அமையவேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் வாழும் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடாத்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எப்போதும் தயாராக உள்ளது.

4- மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படவேண்டும். மேலும் உடனடி பிரச்சினைகளுக்கும் அவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்துவரும் கோரிக்கைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்படவேண்டும். இத்தீர்வுகளுக்கான போராட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது மலையகத் தமிழர்களோடு என்றென்றும் தோளோடு தோள் நிற்கும்.

5- ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு நடத்திய இன அழிப்பு, போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்புக்கூடாக முழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகாரநீதி வழங்கப்படுவதுடன், இன அழிப்புச் செயற்பாடுகளின் மீள்நிகழாமையை உறுதி செய்யவேண்டும். இதுவரையிலுமான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தொகுக்கப்பட்ட அனுபவமாக, ஐநா பொதுச்செயலரின் பொறுப்புகூறலை ஐநா பொதுச்சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும்.

6- அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்பைத் தடுக்கவும், நமது ளங்கள் இனஅழிப்பின் ஒருபகுதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் தேசிய வளங்களை இயற்கையின் சமநிலை குலையாத வகையில் வினைத்திறனுடன் பயன்படுத்தவல்ல தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்புக்களை நாம் உருவாக்கவேண்டும். இதற்கேற்ற வகையில் தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு, புலம் பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளுர் மற்றும் சர்வதேச முதலீடுகளையும் உள்வாங்கும் அதிகாரம் தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

7- எமது நாட்டின் கடல் வளங்கள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கும், கடற்றொழிலாளர்கள் சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குமான வகையில், 2016ஆம் ஆண்டில் இலங்கை இந்திய அரசுகள் மேற்கொண்ட கூட்டு இணக்கத்தின் அடிப்படையில் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பித்தல், 1996ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க மற்றும் 2017ஆம்ஆண்டின் 11ஆம் இலக்க சட்டங்களை உறுதியான முறையில் நடைமுறைப்படுத்துதல், மீனவர் கூட்டுறவுச் சங்கங்களை வலுவாக்குதல், மீனவக் கிராமங்களிலிருந்து படைத்தரப்பினர் வெளியேறுதல போன்ற நடவடிக்கைகள் மூலம் அம்மக்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரங்களும் உறுதிப்படுத்தப் படவேண்டும்.

8- ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டடைவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தோடும், தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென பன்னாட்டு சமூகத்தின் மேற்பார்வையின்கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று (Protective Mechanism) உருவாக்கப்படவேண்டும்.

மேற்கூறப்பட்ட, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிலைப்பாட்டை ஏற்றுத் தமிழ்மக்களும் இதுவே தமது பொதுநிலைப்பாடு என்று தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வெளிக்காட்ட சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்புரிமையோடு வேண்டிநிற்கின்றோம்.

தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்காகவும், கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருமித்த குரலில் ஒலிக்கச் செய்வதற்காகவும், பலமான கட்டமைப்புடனான அரசியல் தீர்வை கோரவும், அதற்கான அழுத்தங்களை தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகளுடாகவும் சர்வதேச சக்திகளுடாகவும் மேற்கொள்ளவும் இத் தேர்தலை ஒரு சந்தர்ப்பமாக எமது மக்கள் கையாளவேண்டும்.

சங்கு சின்னத்திற்கு வழங்கப்படும் வாக்குகள், தமிழ் மக்கள் தங்களுக்குத் தாங்கள் வழங்கும் வாக்குகளாகவே அமையும்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக, தமிழ் மக்களின் தேசியக் கடமையாக சங்குச் சின்னத்துக்கு ஆகக்கூடிய வாக்குகளை வழங்குவதன் மூலம் எங்கள் கோரிக்கைகளை நாங்களே வெற்றி பெறவைப்போம்.