வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணை

sivasakthiதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அவர் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் உடன் சென்றிருந்தார்கள்.
காலை 10.00 மணிக்கு ஆரம்பமான விசாரணை 12.15 வரையில் தொடர்ந்ததாக சிவசக்தி ஆனந்தன்  தெரிவித்தார். கடந்த  வருடத்தில்  வவுனியா  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கைதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கைத் தொiலைபேசிகளிலிருந்து பெறப்பட்ட இலக்கங்களின்படி சிவசக்த்தி ஆனந்தனுக்கு அங்கிருந்து பல தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாகவும், சிவசக்தி ஆனந்தனிடமிருந்து பல அழைப்புக்கள் கைதிகளுக்கு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அதிகாரிகள் அவை தொடர்பாக சிவசக்தி ஆனந்தனிடம் விளக்கம் கேட்டனர். இதன்போது எவ்வாறான விஷயங்கள் பேசப்பட்டன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்த ஆனந்தன், தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும், பல வருடங்களாக குறிப்பிட்ட தொலைபேசியைப் பயன்படுத்துவதாலும் தனது இலக்கம் பலக்குத் தெரியும். அதேவேளையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் தனக்கு வரும் அழைப்புக்களுக்கு தான் பதிலளிப்பதாகத் தெரிவித்தார். வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுடன் தான் சிறைச்சாலைக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதாகவும் ஆனந்தன் தெரிவித்தார். இதனைவிட கைதிகள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டால், கைதிகளுடைய நலன்கள், வழக்கு விவகாரங்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப விடயங்கள் தொடர்பாகவே பேசிக்கொள்வதாகவும், அதனைவிட அரசுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பேசிக்கொள்வதில்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் விளக்கமளித்தார். அதேவேளையில், கைதிகள் சிலர் தொடர்பு கொள்ளும் போது அவர்களது தொலைபேசியில் பணம் இல்லாத நிலையில் தொடர்பு துண்டிக்கப்பட்டால், அவர்களுக்கு தான் மனிதாபிமான அடிப்படையில் அழைப்பு எடுப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் வட மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Hekeemமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் வட மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணக்கப்பாட்டுடன் உரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு  மு.கா.வின் தலைவரும் நிதியமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அச் சந்திப்பிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது. இச் சந்திப்பில் மு.கா.வின் செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி., மு.கா.வின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர், பாரூக் முத்தலிப்பாவா எம்.பி., பைஸல் காசிம் எம்.பி. உட்பட கட்சியின் வன்னி மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இன்று மு.கா. அரசின் பங்காளிக் கட்சியாக ஆட்சியில்  இருந்தபோதும் மு.கா. ஆதரவாளர்கள்  புறந்தள்ளப்படுகின்றனர். இந்நிலையினை இன்னும் தொடர விடக் கூடாதென மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர். எனவே, நடைபெறவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் நலனை முன்னிப்படுத்தி முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக மு.கா. உரிய தரப்பினருடன் இணக்கப்பாட்டோடு இணைந்து போட்டியிடுவதற்குத் தயார் என முடிவெடுக்கப்பட்டது. மேலும், இணக்கப்பாட்டை எட்டுவதற்கு மு.கா. எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்யத் தயார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரணசிங்க பிரேமதாச விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் சஜித் பிரேமதாச 
  
sajithமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவினை ஏற்படுத்தும் நோக்கில் தமது தந்தை இவ்வாறு ஒரு பகுதியினருக்கு ஆயுதங்களை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மாத்தய்யா பிரிவினருக்கு ஜனாதிபதி பிரேமதாச இந்த ஆயுதங்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக தமது தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனுக்க எதிராக கிளர்ச்சி செய்யத் தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் மாத்தய்யாவின் தலைமையிலான குழுவினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்திய உளவுத் துறையான றோவிற்கு புலிகளின் ரகசியங்களை கசிய விட்டதன் காரணமாக பின்னர், பிரபாகரனினால், மாத்தய்யா கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஒரு ஆசிரியரை மாத்திரம் கொண்டு மாணவர்களுக்குக் கற்பிக்கும் அரச பாடசாலைகளாக 74 பாடசாலைகள் இயங்குகின்றன.

schule52 தமிழ் மொழிப்பாடசாலைகளும் 22 சிங்கள மொழிப்பாடசாலைகளும் என இவ்வாறு இயங்குகின்றன. வட மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான ஒரு ஆசிரியரை மட்டும் கொண்டதாகச் செயற்படும் பாடசாலைகள் அமைந்துள்ளன. இம்மாகாணத்தில் 44 பாடசாலைகள் இவ்வாறு உள்ளன. இப்பாடசாலைகளில் 43 தமிழ் மொழிப் பாடசாலைகளும் 01 சிங்களப் பாடசாலையும் அடங்கும்.வவுனியா மாவட்டத்தில் 34 தமிழ் மொழிப் பாடசாலைகளும் 01 சிங்களப் பாடசாலையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 05 தமிழ் மொழிப் பாடசாலைகளும் மன்னார் மாவட்டத்தில் 03 தமிழ் மொழிப்பாடசாலைகளும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 01 தமிழ் மொழிப்பாடசாலையும் கண்டி மாவட்டத்தில் 02 சிங்கள மொழிப் பாடசாலைகளும் மாத்தளை மாவட்டத்தில் 07 சிங்கள மொழிப் பாடசாலைகளும் நுவரெலியா மாவட்டத்தில் 02 சிங்கள மொழிப் பாடசாலைகளும் 01 தமிழ் மொழிப்பாடசாலையும் காலி மாவட்டத்தில் 01 சிங்கள மொழிப்பாடசாலையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 தமிழ் பாடசாலைகளும் திருகோணமலை மாவட்டத்தில் 02 தமிழ்மொழிப் பாடசாலைகளும் குருணாகல் மாவட்டத்தில் 01 சிங்களப் பாடசாலையும் அநுராதபுரம் மாவட்டத்தில் 01 சிங்கள மொழிப் பாடசாலையும் பதுளை மாவட்டத்தில் 02 சிங்கள மொழிப்  பாடசாலையும்  இரத்தினப்புரி  மாவட்டத்தில் 1 சிங்களமொழி பாடசாலையும் 3 தமிழ் மொழிப் பாடசாலையும் கேகாலை மாவட்டத்தில் 04 சிங்களப் பாடசாலைகளும் செயல்படுவதாக கல்வி அமைச்சின் தகவல் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியைப் போன்று தற்போது கிழக்கிலும்

mujeeவடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியைப் போன்று தற்போது கிழக்கிலும் இராணுவ ஆட்சியை மேற்கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார். இந்த நாட்டை யாரும் பிளவுபடுத்த அனுமதிக்க முடியாதென்று தெரிவிக்கும் ஜனாதிபதி, சீனா, இந்தியா  மற்றும்  பாகிஸ்தான்  போன்ற  நாடுகளுக்கு  துண்டுதுண்டுகளாக கூறு போட்டு நாட்டின் காணிகளை விற்றுள்ளார். இந்நிலையில்  வடக்கில் தமிழ், முஸ்லிம்  மக்களின்  காணிகள்  இராணுவத்தினரை பயன்படுத்தி  அபகரித்த  அரசாங்கம், தற்போது  கிழக்கிலும் இதனை மேற்கொண்டு வருகின்றது. வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியைப் போன்று கிழக்கிலும் தற்போது இராணுவ ஆட்சி  நிலவுகின்றது. குறிப்பாக  கிழக்கில் புல்மோட்டையில் மக்களின் காணிகளை கடற்படையினர் தமது தேவைக்காக சுவீகரித்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் இடம்பெறுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுமானால் நாடு இன்னுமொரு யுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்  ராஜகிரியவில் இன்று  செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற  ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்து வவுனியாவில் பேரணி-

சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, கண்டி வீதி பௌத்த விகாரைக்கு முன்பாகவிருந்து ஆரம்பமான இப் பேரணியானது வவுனியா மாவட்ட செயலகத்தை அடைந்தது. அங்கு ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜரொன்று அரசசார்பற்ற பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட மேலதிக அரசஅதிபர் சரஸ்வதி மோகநாதனிடம் ஒப்படைத்ததுடன், வவுனியா மாவட்டத்திலுள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கும் மகஜரொன்றை கையளித்துள்ளனர். சர்வோதயம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பலரும் பங்கேற்றிருந்தனர். 
 
காணி சுவீகரிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கத் தீர்மானம்-

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கை யாழ்ப்பாணத்தின் ஆயிரத்து 474 பொதுமக்கள் தாக்கல் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கச்சதீவை மீட்குமாறு தமிழக முதல்வர் மீண்டும் கடிதம்-

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே, கடந்த 1974ஆம் மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கச்சதீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என ஜெயலலிதா மத்திய அரசை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார். கச்சதீவை மீட்க வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்றத்திலும்; வழக்கும் தொடரப்பட்டது. மேலும் கச்சதீவை மீட்க வலியுறுத்தி, தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கச்சதீவை மீட்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய பகுதியான கச்சதீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கச்சதீவை மீட்டபிறகு சர்வதேச கட்சார் எல்லைக்கோடு பகுதியை மீண்டும் வரையறை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
     
பஸ் விபத்தில் பலர் காயம்-

யாழ்ப்பணத்தில் இருந்து தியத்தலாவை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று இன்றுஅதிகாலை நுவரெலியாவின் றம்பொட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. றம்பொட, புளுபீல்ட் தோட்டத்திற்கு அருகாமையில் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.