தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு-

Capture

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்கு ஒன்று யாழ். மானிப்பாய் சாவற்காடு பிரதேசத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை மிகப் பெரும்பான்மையாக வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திப் பேசியதுடன், வட மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இக்கருத்தரங்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் கௌரகாந்தனும் கலந்துகொண்டு உரையாற்றினார். ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

வட மாகாணசபை வேட்பாளர் சடலமாக மீட்பு-

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகம், ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில் ஒன்றில் இருந்தே இவருடைய சடலம் மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலீசார் தெரிவித்துள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இதுபற்றிய விசாரணைகளை யாழ். பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.நா அறிக்கை தொடர்பிலான பான்கீ மூனின் நிலைப்பாடு-

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஐ.நா செயலர் பான்கீ மூன் ஆராய்ந்து வருவதாக த இன்னர்சிட்டி பிரஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் யுத்தம் தொடர்பான செயற்பாடுகளில் ஐ.நா சபை தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட அறிக்கை ஒன்றின் அடிப்படையில், ஐ.நா கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்த மற்றுமொரு அறிக்கை பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆராந்து வருகின்ற பான்கீ மூன் இது தொடர்பான தமது நிலைப்பாட்டை அடுத்தமாதம் அறிவிப்பார் என ஐக்கிய நாடுகளின் ஊடக பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனத்தில் தீ விபத்து- அம்பாந்தோட்டை –

கட்டுவௌ சந்தியில் உள்ள சீனாவின் கெனிக் வீதி நிர்மாண நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 8.45 அளவில் இத்தீ விபத்து ஏற்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டை பொலீசார் மற்றும் நிறுவன ஊழியர்கள் இணைந்து தீயை அணைத்துள்ளனர். தீ விபத்தால் ஊழியர்களின் விடுதிக்கும் அங்கிருந்த ஆவணங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. சேத விபரம் இன்னும் கணிக்கப்படவில்லை. மின் ஒழுக்கு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கை – இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை-

கொழும்பில் ஆகஸ்ட் 7-ஆம் திகதி இந்திய, இலங்கை தூதரக அதிகாரிகள் முன்னிலையில் இலங்கை-தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளின் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து டில்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் கூறுகையில், இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை முடிவுக்கு கொண்டுவர இச்சந்திப்பு நடைபெற வேண்டும் என இந்தியா விரும்புகிறது என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக, இக்கூட்டம் ஆகஸ்ட் 1-ஆம் திகதி நடப்பதாக இருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு கொழும்பு செல்ல தமிழக மீனவர்கள் விரும்பினர். ஆனால், முதல்வரைச் சந்திக்க நேரம் கிடைக்காததால் பயணத்தைத் தாற்காலிகமாக மீனவர்கள் தவிர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இராணுவம் நடமாடக் கூடாது –

சுரேஷ் எம்.பி- வடக்கில் தேர்தல் ஜனநாயகமாக நடைபெற விரும்பினால் படையினர் சிவில் உடையிலோ, சீருடையிலோ நடமாட கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியிறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றுகாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனைக் கூறியுள்ளார். யாழில் 13 ஆயிரம் இராணுவத்தினரே இருப்பதாக கூறப்படுகின்றது, யாழ்ப்பாணம் மட்டும் வடக்கல்ல, 10லட்சம் பேர் வாழ்கின்ற வடக்கு மாகாணத்தில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு யாழ் வந்திருந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தான் இராணுவத்தினரை யாழ்பாணத்தில் காணவில்லை என கூறியிருந்தார். இங்குள்ள இராணுவத்தினர் சிவில் உடையில் இருப்பது அவருக்கு எவ்வாறு தெரியும்? நேற்று வல்வெட்டித்துறை. தீருவிலில் வல்வெட்டிதுறை நகர சபையினரால் அமைக்கப்பட்டிருந்த பொது பூங்காவின் பெயர்பபலகை இனம் தெரியாதவர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. அந்த இனம்தெரியாதவர்கள் இராணுவத்தினரே என நாம் சந்தேகப்படுகின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாகாண சபை வேட்பாளர்களுக்கு அறிவூட்டல் கருத்தரங்கு-

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான தேர்தல் சட்டம் தொடர்பிலான அறிவூட்டல் கருத்தரங்குகளை நடத்த தேர்தல்கள் செயலகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 6, 7ஆம் திகதிகளில் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்ளிலுள்ள வேட்பாளர்களுக்கு கருத்தரங்குகளை நடத்தவுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார் எதிர்வரும், 12 மற்றும் 13 ஆகிய இரு தினங்களிலும் வட மாகாணசபைக்கான வேட்பாளர்களுக்கு கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன. தேர்தல் சட்டவிதிகளுக்கு அமைய வேட்பாளர்கள் தங்கள் பிரசாரங்களை முன்னெடுப்பதற்குரிய வழிமுறைகளை பின்பற்றுவதற்கு வசதியாக இந்த அறிவுறுத்தல் கருத்தரங்குகள் நடத்தப்படுவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்ற பட்சத்தில் பொலீசார் சட்டங்களை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த அறிவூட்டல் கருத்தரங்குகள் மூலம் எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அடையாள அட்டை பெற இன்றும் வசதி-

இதுவரை தேசிய அடையாள அட்டை கிடைக்காத, இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, அதனை பெற்றுக்கொள்வதற்காக இன்று முழுவதும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாணவர்கள் நேரடியாக சமூகமளிக்கத் தேவையில்லை என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத் குமார குறிப்பிட்டுள்ளார். பெற்றோர் அல்லது வேறு எவரேனும் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர் மாணவர்களின் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள சந்தர்பபம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேசிய அடையாள அட்டைக்காக உரிய விண்ணப்பபடிவத்துடன் தேவையான ஆவணங்களை சமர்பித்து நாளைக்குள் மாணவர்கள் தேசிய  அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.

ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐ.நா. கோரிக்கை-

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அடக்குமுறைகள் எதுவுமின்றி சுதந்திரமான முறையில் தங்களது கடமைகளை மேற்கொள்ள ஊடகவியலாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஐ.நா கேட்டுள்ளது. ஐ.நா அமைப்பின் பொதுச் செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீயிடம் இன்னர்சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இலங்கையின் ஊடக சுதந்திரம் தொடர்பில் பாரியளவில் சர்ச்சைகள் நிலவி வருகின்றது. ஊடக சுதந்திரம் மிகவும் அவசியமானது. கம்பஹாவின் வெலிவேரிய தாக்குதல் குறித்து தற்போதைக்கு எதுவும் குறிப்பிட முடியாது. இதேவேளை, இலங்கை, யுத்தத்தின் போது ஐ.நா அமைப்பின் பங்களிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைப் பரிந்துரைகள் கவனத்திற் கொள்ளப்படும் என நெசர்கீ மேலும் கூறியுள்ளார்.