உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு தீர்மானம்-
2012ம் இலக்க 22வது உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இது குறித்து கலந்துரையாடல்களை நடாத்தி அமைச்சரவைக்கு பணிப்புரையை சமர்ப்பிப்பது தொடர்பில், அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தக் குழுவின் தலைவராக அமைச்சர் பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் ஏனைய உறுப்பினர்களாக ரவூப் ஹக்கீம், சுசில் பிரேமஜெயந்த, வஜிர அபேவர்த்தன, ரிஷாட் பதியூதின், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக, விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் மனோ கணேஷன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் குழுவின் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது
முன்னாள் போராளிகளின் மரணம், சர்வதேச மருத்துவக்குழு ஆய்வுக்கு கோரிக்கை-
இறுதி யுத்தத்தின்போது படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் தொடர் மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள அவர்களது உறவினர்கள், இதுகுறித்து சர்வதேச மருத்துவக் குழுவினால் ஆய்வுசெய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் இன்று நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்களது கருத்தறியும் செயலணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஒருவர், இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அத்தோடு, முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டுவரும் நிலை நிறுத்தப்பட வேண்டுமென்றும், நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களது காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் இதன்போது பலர் கருத்துத் தெரிவித்தனர். மேலும், தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படாமல் அதிகார பகிர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
வட்டுவாகலில் படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு-
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் கடற்படையினருக்கு வழங்கப்படவுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதற்காக நாளையதினம் நில அளவை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை அரச நில அளவையாளர் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார். நாளைகாலை ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நிலஅளவை நடவடிக்கை, 5ஆம் திகதிவரை தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே. குறித்தபகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் யாராவது இருப்பின் அவர்கள் உரிய ஆவணங்களுடன் நில அளவை செய்யப்படும் இடத்திற்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த விடயத்தினை கேள்வியுற்ற முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை வாசிக்க…
Read more