பள்ளிமுனை மக்களின் எதிர்ப்பினால் காணி அளவீடு தற்காலிகமாக கைவிடப்பட்டது-

sdfdffdfdகடற்படையினர் வசமுள்ள தமது பூர்வீகக் காணிகளை அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மன்னார் – பள்ளிமுனை கிராம மக்கள் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். யுத்தம் காரணமாக மன்னார் – பள்ளிமுனை கிராமத்தின் கடற்கரையை அண்மித்த மக்கள் தமது சொந்த இடத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றனர். யுத்தம் நிறைவுற்ற பின்னர் தமது பூர்வீகக் காணிகளில் மீள்குடியேறும் எதிர்பார்ப்புடன் வந்த மக்களுக்கு, அங்கு குடியேறுவதற்கான சூழல் காணப்படவில்லை.

பூர்வீகக் காணிகளில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்ததை அடுத்து, தமது காணிகளை விடுவிக்கக்கோரி 2013 ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இந்த மக்கள் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை இடம்பெறுகின்ற நிலையில், கடற்படை முகாம் அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதற்கு நில அளவை திணைக்களத்தினர் இன்று சமூகமளித்திருந்தனர். இதனை அறிந்த மக்கள் தமது பூர்வீகக் காணிகளை கடற்படையினர் சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடற்படை முகாம் அமைந்துள்ள வீதியை மறித்து இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த காணியை சுவீகரிப்பதற்கு எதிரான நீதிமன்ற தடையுத்தரவொன்றை 10 நாட்களுக்குள் பெறுமாறு, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பள்ளிமுனை பிரதேச செயலாளர் மக்களுக்கு அறிவித்ததோடு, காணி அளவீட்டு நடவடிக்கை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.டி பள்ளிமுனை கிராம மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி கூறுகையில், அந்தக் காணிகள் தங்களுடையது என நிரூபிப்பதற்குரிய ஆவணங்கள் மக்களிடம் இருக்கும் பட்சத்தில், அது தொடர்பில் அவர்களுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளார். அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள கடற்படையினரின் காணிகளை அளவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு கட்டமாகவே இந்த அளவீட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி மேலும் குறிப்பிட்டுள்ளார்.