18.05.2013

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிப்பு-

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது உயிர்நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனந்தெரியாதோரால் இடித்து அழிக்ககப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் அறிந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளனர்.

வட மாகாணசபைத் தேர்தலில் 721,488 பேர் வாக்களிக்க தகுதி:-

வட மாகாணசபைத் தேர்தல் 2012ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் இத்தேர்தலில் வாக்களிக்க 721, 488 பேர்  தகுதியுடையவர்களாக உள்ளனர் எனவும் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி யாழ் மாவட்டத்தில் 426,703 வாக்காளர்களும், மன்னாரில் 70, 085 வாக்காளர்களும், வவுனியாவில் 96, 702 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 59,409 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68,584 வாக்காளர்களுமாக மொத்தம் 721,488 வாக்காளர்களாக பதிசெய்துள்ளனர். யுத்த காலப்பகுதியல் உயிரிழந்த மற்றும் காணாமல் போனாவர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் பெயர் விபரங்களும் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் வாக்காளர் பதிவேட்டில் பதியப்பட்டு வந்தன. 2012ம் ஆண்டு வாக்காளர் பதிவு மேற்கொள்ளும்போது அனைவரது விபரங்களும் சரியான முறையில் ஆய்வுசெய்து பதிவேற்றப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.  
 
72 கிலோமீற்றர் பரப்பில் மாத்திரமே கண்ணிவெடி அகற்றப்பட வேண்டும்

ருவன் வணிகசூரிய- வடக்கில் 72 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு மாத்திரமே கண்ணிவெடிகள் அகற்றுப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக இராணுவப்பேச்சாளர்  ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு பின் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி அகற்றும் பணிமூலம் இதுவரை வடக்கில் 1345 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான கண்ணிவெடிகள், மிதிவெடிகள், யுத்த தாங்கி அழிப்பு வெடிகள் மற்றும் பல்வேறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யாழ். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு-

யாழ் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பிiனைப் பலப்படுத்தியுள்ளனர. இதன்படி அப்பகுதியில் பெருமளவு பொலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்திலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதேவேளை யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றுக்காலை இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதாகவும், நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும், பேராசிரியர்கள் சிலரும் தீபமேற்றி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 
 
நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததும் எஞ்சிய பகுதிகளுக்கு தேர்தல்-

முல்லைத்தீவு மாவட்டத்தில் இனறுவரை நடத்தப்படாதுள்ள பதுக்குடியிருப்பு, கரைந்துறைப்பற்று ஆகிய இரு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை அனுமதி கிடைத்தவுடன் உடன் நடத்தமுடியும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக அங்கு தேர்தல்களை நடத்த முடியும். தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டே உள்ளது. வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவது பற்றி ஜனாதிபதியே தீர்மானிப்பார் என எம்.எம்.மொஹமட் மேலும் கூறியுள்ளார். 
  
யுத்தவெற்றி கொண்டாட்டத்தின்போது கடற்படை படகு மூழ்கியது-

யுத்த வெற்றி கொண்டாடத்தின்போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி முகத்திடல் கடற்பரப்பில் மேற்படி படகு மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதன்போது படகிலிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 3பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
13ஆவது திருத்தத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்:-இந்தியா

இலங்கையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக நீக்குவதற்கு இலங்கை கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ள இந்தியா,  13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டாம் என வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவமைச்சர் சல்மான் குர்ஷித்தே இலங்கை அரசாங்கத்திடம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியபோதே சல்மான் குர்ஷித் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். 
 
ஷிராணி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுமுன் ஆஜர்-

முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைகுழு முன்னிலையில் இன்று ஆஜராகியுள்ளர். சொத்துக்கள் குறித்த விசாரணைகளுடன் தொடர்புடைய வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக இன்று ஆணைக்குழுமுன் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் பணியாளர் நாயகம் லமி விஜயவிக்ரம தெரிவித்துள்ளார். இதற்கமைய முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்ததாக அவர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்தூவஹெட்டி குறிப்பிட்டுள்ளார்.