மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் பேரணி-

130804131321_battiprotest_304x171_bbc_nocreditமட்டக்களப்பு மாவட்டத்தில் கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு வலுயுறுத்தி இன்று கவனயீர்ப்பு பேரணி நடத்தப்பட்டுள்ளது.     இன்றுகாலை மாங்காடு பிள்ளையார் கோவிலிருந்து ஆரம்பமான பேரணி குருக்கள் மடம் ஐயனார் கோயிலை சென்றடைந்துள்ளது. கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்றவர்கள் சிவபுராணத்தை ஓதியவாறு ஆலயங்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் சுலோகங்களை ஏந்திச்சென்றிருந்தனர். இதேவேளை கோயில்கள் சேதமாக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக களுவாஞ்சிக்குடி பொலீசார் அறிவித்துள்ளனர்

இலங்கையர்களும் உள்ளடங்கிய படகுகள் ஆஸியை அடைந்தன-

இலங்கையர்களும் உள்ளடங்கிய அகதிகளின் குழுக்கள் இரண்டு நேற்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளன. இக்குழுவில் 16பேர்  இலங்கையர்கள் என கூறப்படுகிறது. இந்த குழுவினர் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் கெவின் ரட், பதவி ஏற்பதற்கு முன்னதாக இலங்கையிலிருந்து தங்களின் பயணத்தை ஆரம்பித்திருப்பதாக தெரியவருகிறது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் தொடர்பான சட்டங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது தெரியவருகிறது. கிறிஸ்மஸ் தீவில் உள்ள அகதிகள் முகாமிற்கு இவர்கள் அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர்.

விருப்பு இலக்கங்களை வழங்க நடவடிக்கை-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் எதிர்வரும் இரண்டொரு தினங்களில் வழங்கப்படவுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள 10 மாவட்டங்களின் தேர்தல் செயலகங்களாலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பெயர் விபரங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதி நிலையை அடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி நாளை அல்லது நாளை மறுதினம் வேட்பாளர்கள் தங்களின் வேட்பு இலக்கங்களை மாவட்ட தேர்தல்கள் செயலகங்களில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கோப்பாய் பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு-

யாழ். கோப்பாய் பொலீஸ் நிலைய பொலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இன்றுகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி அத்தியர் இந்து கல்லூரியில் நாளை நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான பாதுகாப்பு கடமையில் நேற்றிரவு ஈடுபட்டிருந்த குறித்த பொலீஸ் உத்தியோகஸ்தரே காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக கடமையாற்றும் பண்டாரவளையை சேர்ந்த நு.ஆ.புத்ததாச (வயது 48) என்பவராவார். இவர் மாரடைப்பின் காரணமாகவே மரணமடைந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வெலிவேரிய சம்பவத்தில் மூன்றாவது நபரும் உயிரிழப்பு –

கம்பஹா மாவட்டம் ரதுபஸ்வல இரசாயன கழிவு நீர் பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த 01ம் திகதி வெலிவேரிய நகர மத்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபரும் இன்று உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 29 வயதுடைய ஆண் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுத்தமான குடிநீர் கேட்டு கடந்த முதலாம் திகதி மாலை 5மணியளவில் போராட்டம் நடத்திய பிரதேச மக்கள்மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உடனேயே 17 வயதுடைய இளைஞன் பலியானதுடன் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்றிரவு 19வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதோடு இன்றுகாலை இன்னும் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பு அறிவித்துள்ளது.

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அனுமதியில்லை

படகுகள் மூலம் வரும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது நாட்டில் குடியேற்றப்பட மாட்டர்கள் என அவுஸ்ரேலியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. குடியேற்றவாசிகளை குடியமர்த்துவது தொடர்பில் உடன்படிக்கையொன்றில் அவுஸ்ரேலியாவும் நவ்ரூ இராஜ்ஜியமும் நேற்று கைச்சாத்திட்டுள்ளன. புதிய உடன்படிக்கைக்கு அமைய அகதி அந்தஸ்தை பெற்றுகொள்ளும் பொருட்டு படகுகள் ஊடாக சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு வருகை தருபவர்கள் நவ்ரூ இராஜ்ஜியத்திற்கு அனுப்பப்படவுள்ளனர். இவர்களின் புகலிடக் கோரிக்கை உறுதிசெய்யப்பட்டாலும், தொடந்தும் நவ்ரூ தீவில் தங்கவைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமலையில் மீனவர்கள்தாக்குதல்-மீது தாக்குதல்-

திருகோணமலை கடற்பரப்பில் மீனவர்கள் சிலர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிண்ணியாவிலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் சிலரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மூன்று மீனவர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கிண்ணியா பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலீஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தேர்தல் பகுதிகளில் நடைபவனிகள், ஊர்வலங்களுக்குத் தடை-

மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் நடைபவனிகள், பிரசார ஊர்வலங்கள் மற்றும் மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டங்களை நடத்த வேண்டாம் என தேர்தல்கள் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்வேறு தரப்பினர் ஏற்பாடு செய்யும் இத்தகைய நிகழ்வுகளை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கலாம் என்பதால் தேர்தல்கள் செயலகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இதற்கமைய வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதிவரை நடைபவனிகள், பிரசார ஊர்வலங்கள் மற்றும் தெளிவூட்டல் கூட்டங்களை நடத்தக்கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.