பாடசாலைகள் நாளை மறுதினம் (21) திறக்கப்பட உள்ள நிலையில், பாடசாலைகளுக்கு செல்லாத ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆசிரியர்கள் நாளை மறுதினம் (21) பாடசாலைகளுக்கு வருவார்கள் என நம்புகிறேன். குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள்  தான் இலங்கை வரலாற்றில் எப்போதும்  இருந்திருக்கிறார்கள். ஜே.வி.பி  பாடசாலைகளை மூட அழைப்பு விடுத்தபோது இந்த ஆசிரியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்த வரலாறு உள்ளது. எனவே, ஜே.வி.பி மற்றும் பிற தொழிற்சங்கங்கள் என்ன கூறினாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் 21ஆம் திகதி பாடசாலைக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், யாரும் வேலைக்கு வரவில்லை என்றால் அது பிரச்சினையாகிவிடும். அது  பொதுவான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால்  சம்பளம் கிடைக்கிறதென்றால் வேலைக்கு வரும்படி கேட்டால், நீங்கள் வேலைக்கு வர வேண்டும். இது  பொதுவானது, ஆசிரியர்கள் மட்டுமல்ல வேறு யார் வேலைக்கு  வராவிட்டாலும் நடக்கக் கூடியதே எனவும் தெரிவித்துள்ளார். பணிக்கு வராதவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.