தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்திப்பு-

TNA met americanதமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு மற்றும் அடிப்படை பிரச்சினைகள் விடயத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும் என அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப்பிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப் தலமையிலான குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துள்ளனர். நேற்று யாழ். மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டபோதே, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சார்ள் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சந்திப்பின் பின்னர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. தமிழ் மக்கள் விடயத்தில் அமெரிக்கா தொடர்ச்சியான பங்களிப்பை செலுத்தி வருகின்றது. அதனடிப்படையில் 2012ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஒத்ததான தீர்வினை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும், காணாமல் போனவர்கள் விடயம், மீள்குடியேற்ற விடயம், மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் போன்றவற்றிலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதார மேம்பாட்டு விடயத்திலும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பங்களிப்பு எமக்கு தொடர்ச்சியாக வேண்டும் என்பதை கேட்டிருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.