தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) ஆகியவற்றின் “சுவிஸ் வீரமக்கள் தின” நிகழ்வு 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை 4552 Derendingen எனுமிடத்தில், தோழர். சுவிஸ் ரஞ்சன் அவர்களின் தலைமையில் எளிமையான முறையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில், பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுடன், மலரஞ்சலி, மௌனஅஞ்சலி போன்ற நிகழ்வுடன், வரவேற்பு உரையும், சகோதர கட்சிகளின் பேச்சாளர்கள் மற்றும் சான்றோர் உரை, நன்றியுரை போன்றனவும் நடைபெற்று, மதிய போசனத்துடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
முதல் நிகழ்வாக, “பொதுச்சுடரினை” புளொட் அமைப்பின் மட்டுநகர் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்து, தற்போது சுவிஸில் வாழும் தோழர். சித்தா அவர்கள் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து அமைப்புகளின் சார்பான ஈகைச் சுடர்களை ரெலோ அமைப்பின் தோழர் விமல், புலிகளின் தீவிர ஆதரவாளரான திரு.சுதர்ஷன், ஈ.பி.டி.பி அமைப்பின் தோழர். யசி, பொது அமைப்புகளின் சார்பில் திரு.பொலிகை ஜெயா ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

இதனைத் தொடந்து “விடுதலைப் போராட்டத்தில் மரணித்த அனைத்துக் கழகத் தோழர்கள், அனைத்து அமைப்புகளின் போராளிகள், பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வாக” கலந்து கொண்ட அனைத்து மக்களினாலும் சுடரேற்றப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வினைத் தொடர்ந்து அனைவரினாலும் இருநிமிட மௌன அஞ்சலியுடன் உரை நிகழ்வு ஆரம்பமாகியது.

முதலாவதாக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சித்தார்த்தன் அவர்களின் வீரமக்கள் தினச் செய்தி தோழர் சுவிஸ் ரஞ்சன் அவர்களால் வாசிக்கப்பட்டது. மேற்படி அறிக்கையில், “தற்போதைய நாட்டின் சூழ்நிலைகளின் யதார்த்தம் குறித்தும், எதிர்கால செயல்பாடு குறித்தும், வீரமக்கள் தின நிகழ்வின் அவசியம் பற்றியும் விரிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நோர்வேயில் இருந்து தோழர் “ராஜன்” அவர்கள் தொலைபேசி மூலம் கருத்துத் தெரிவித்து இருந்தார். அவரது கருத்தில் “அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து குறிப்பிட்ட ஏதாவது நாளொன்றை எடுத்து, அத்திகதியில் அனைவருக்குமான நினைவு தினத்தைக் கொண்டாடுவதே சிறப்பென எமது தலைவர் சித்தார்த்தர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து மக்களும் சிந்திக்க வேண்டுமென குறிப்பட்டதுடன், இம்முறை வீரமக்கள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், மட்டுநகர், அம்பாறை, மலையகம் என்று பல பகுதிகளையும் உள்ளடக்கி கவிதை போட்டி நிகழ்வு நடத்தியது குறித்தும் அவர்களுக்கான பரிசில்கள் குறித்தும்” விபரித்தார்.

இதனைத் தொடர்ந்து பொது அமைப்புகளின் சார்பில், கம்யூனிஸ்ட்வாதியும், பேச்சாளருமான திரு.பொலிகை ஜெயா அவர்கள் பல தத்துவார்த்தக் கருத்துக்களுடன் உரையாற்றி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையை ஆரம்பித்தவர்களில் ஒருவரும், பின்னர் ஒருவருடமாக “மனிதம்” செயற்பாட்டாளராக இருந்தவரும் தற்போது சுவிஸ் நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றான “சோசலிஷக் கடசியின்” சொலோத்தூண் மாநில செயற்பாட்டாளர்களில் ஒருவராக உள்ள திரு.சுதாகரன் உரையாற்றி இருந்தார்.

தொடர்ந்து ரெலோ அமைப்பின் சார்பில் தோழர்.ஞானம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “தனது கடந்த கால ரெலோ, புளொட் உறவுகள், வாழ்க்கைகள் குறித்தும் விபரித்ததுடன், யதார்த்த சூழ்நிலைகள் குறித்தும்” விபரித்தார்.

இதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன், மதிய போசனத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.