பொதுவுடைமைவாதி, காந்தீய அமைப்பின் செயற்பாட்டாளர், ‘விடுதலை’ இதழின் ஆசிரியர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இராணுவத் தளபதி தோழர் பார்த்தன் (இராஜதுரை ஜெயச்சந்திரன்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
தோழர் பார்த்தன் (இரா.ஜெயச்சந்திரன்) –
மலர்வு – 06.07.1959
உதிர்வு – 24.04.1984

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியி மாணவராக இருந்தபோதே கல்வியில் சிங்கள திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தார். சிங்கள திணிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டவாறு தமிழர் உரிமைப் போராட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார். 1970 களில், பாடசாலையில் சிங்கள திணிப்புக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் தெளிவுபடுத்தலை மேற்கொண்டு சிங்கள திணிப்பை தடுத்து நிறுத்திய போராளியாக உருவெடுத்தார்.
அத்துமீறிய சிங்கள குடியேற்றம், படையினரின் அடக்குமுறைகள் என்பவற்றுக்கு எதிராக போராடவென தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். 1977ல் பேரினவாத வெறியர்களால் தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, படையினரிடமிருந்தும் , சிங்கள காடையர்களிடமிருந்தும் தமிழ் மக்களைக் காப்பதற்காக ஆயுதமேந்தி போராட தீர்மானித்தார்.
பொதுவுடமை சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட இவர், மக்களை அரசியல் மயப்படுத்தவும், உரிமைப் போராட்டத்திற்காக ஆயுதமேந்த வைக்கவும் கூடிய போராட்டக் கொள்கையை ஏற்றுக் கொண்ட புளொட் அமைப்பில் 1980ல் தன்னை இணைத்துக் கொண்டார்.
அமைப்பில் உள்வாங்கப்பட்ட போராளிகளிற்கு பல பயிற்சி முகாம்களையும் நடாத்தி பயிற்சி ஆசிரியராகவும் திகழ்ந்தார். பேரினவாதிகளால் அடித்து விரட்டப்பட்டு ஏதிலிகளாகிய மலையக மக்களை காந்தீய அமைப்பு மூலம் வடக்கு கிழக்கில் குடியமர்த்தி வாழ்வாதார உதவிகளையும் செய்து வந்தார். பாட்டாளி மக்களின் மறுவாழ்விற்காகவும் பாதுகாப்பான வாழ்வுக்காகவும் அயராது செயற்பட்டவர்.
திருமலை மாவட்ட காந்தீய அமைப்பின் செயலாளராக செயலாற்றியதுடன் புளொட் அமைப்பின் திருமலை மாவட்ட செயலாளராகவும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். விடுதலை என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றி மக்களை எழுச்சி கொள்ள வைக்கும் பணிகளிலும் ஈடுபட்டார்.
1983ல் மேன்காமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியர் வேலை கிடைத்த போதிலும், இனவாத பாசிச அரசினால் கொண்டு வரப்பட்ட பிரிவினை எதிர்ப்பு சத்தியப் பிரமாண சட்டத்தை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்ததுடன், தமிழ் மக்களுக்களின் முழுமையான விடுதலைக்காய் தன் வாழ்நாள் பூராவும் தலைமறைவு வாழ்க்கையினைத் தொடர்ந்தார். ஒரு சமயம், கொக்குவில் பகுதியில் தோழர்களுடன் நின்றிருந்தவேளையில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது ஒரு ஆயுதத்தை மட்டுமே வைத்துக்கொண்டு படையினருடன் சமர் செய்து வெற்றிகொண்டு தோழர்களை பாதுகாத்தார்.
வெலிக்கடைப் படுகொலையில் எஞ்சியிருந்த போராளிகள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு சிறையுடைப்பு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றி சிறை மீண்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினார். மலையக மக்களை ஒடுக்கு முறையில் இருந்து மீட்க அவர்களையும் உரிமைப் போராட்டத்திற்காக ஆயுதம் ஏந்த வைக்க ஆயுதப் பயிற்சியளிக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டார்.
ஈடு இணையில்லாத, ஒரு முழுமையான போராளியாக உருவெடுத்து வந்த தோழர் பார்த்தன் அவர்களை பெரும் அச்சுறுத்தலாக கருதிய சிறீலங்கா அரசு இவரை, காணும் இடத்தில் துப்பாக்கிச் சூடு நடாத்தியேனும் கைது செய்ய உத்தரவிட்டது.
இறுதியாக 24.04.1984 அன்று மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அரச படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் தன் இன்னுயிரை இழந்தார்.