பன்னாலையில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்-

Card copyயாழ். பன்னாலைப் பகுதியில் நேற்றுமாலை தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. மகாதேவன்(ஜே.பி) அவர்;களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், புளொட் தலைவருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், ஊர்ப் பிரமுகர்களும் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றிய திரு.சித்தார்த்தன் அவர்கள், வட மாகாணசபைத் தேர்தலில் பெருந்தொகையாக மக்கள் சென்று வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய பெற்றியினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திப் பேசினார். இந்தக் கூட்டத்தில் கட்சிப் பிரதிநிதிகள், உள்ளுராட்சி சபைகளின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்

மகாறம்பைக்குளம் முத்துமாரியம்மன் ஆலய கட்டுமானப் பணிகள்-

வவுனியா மகாறம்பைக்குளம் சிறீ நடன முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு உதவி வழங்குமாறு அப்பிரதேச மக்களும் ஆலய பரிபாலன சபையினரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களிடம் கேட்டிருந்தனர். இந்நிலையில் திரு.க.சந்திரகுலசிங்கம் அவர்களின் உதவியினைத் தொடர்ந்து மேற்படி ஆலய கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஆலய பரிபாலன சபையினரும், பிரதேச மக்களும் திரு.சந்திரகுலசிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பு 30ஆம் திகதி நவநீதம்பிள்ளையுடன் சந்திப்பு-

இலங்கைவரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரவித்துள்ளது. கொழும்பில் தம்மைச் சந்திப்பதற்கு 30ஆம் திகதி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. இச் சந்திப்பின்போது வடக்கில் படைக்குறைப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. ஆணையாளருக்கு தெளிவுபடுத்தவுள்ளது. மனித உரிமைகள் விவகாரம் தொடர்பிலும், வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது எனவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு அகதிகள் படகு மூழ்கியது-

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகப் பயணித்த மற்றொரு படகு கிறிஸ்மஸ் தீவருகே மூழ்கியுள்ளது. இந்தோனேசியாவிலிருந்த பயணித்த இப் படகிலிருந்து 106 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவிலிருந்து 120 கிலோமீற்றர் கடல்மைல் தொலைவில் இப்படகு மூழ்கியிருக்கிறது. சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகொன்று மூழ்குவதாக கிடைத்த தகவலையடுத்து கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சுங்கப் பிரிவினரின் விமானங்களும், அவுஸ்திரேலிய கடற்படையினரின் கப்பலொன்றும் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. படகில் பயணித்தவர்களில் இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், படகிலிருந்தவர்களை மீட்பதற்கு 8 ஹெலிகொப்டர்களும், கடற்படையினரின் 02 படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்பு அதிகாரசபையின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இந்திய ஜனாதிபதி சந்திப்பு-

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை புதுடில்லியில் நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் வரையில் நீடித்ததாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், வலயத்தின் பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, ரணில் விக்ரமசிங்க நேற்று அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தீக் விஜேசிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன், முன்னாள் நீதியமைச்சரும் வெளிவிவகார அமைச்சருமான யஸ்வத் சிங்ஹாவையும் அவர் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இந்திய விஜயத்தின் இறுதி நாளான இன்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்தியாவிலுள்ள அகதிகளை அழைத்துவர நடவடிக்கை-

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான ஆணையாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்தின்போது இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வந்து, அவர்களை தமது சொந்த இடத்திலேயே குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குணரத்ன வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பாகிஸ்தானுக்கும் விஜயம்-

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு நாளை விஜயம் செய்யவுள்ளார். இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்கே அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளுக்கு புனர்வாழ்வு-

போதைப்பொருட்களுக்கு அடிமையான கைதிகளை சிறைச்சாலையில் தடுத்து வைக்காது நேரடியாக புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட செயற்றிட்டம்  நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். இதன்படி பொலனறுவையிலுள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு 24 கைதிகள் நேற்று அனுப்பப்பட்டுள்ளனர். இங்கு ஒரே நேரத்தில் 250 கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்க இடவசதி உள்ளது. இனிமேல் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் நேரடியாக புனர்வாழ்வு நிலையத்திற்கே அனுப்பப்படுவர். நாடுபூராவும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 65 வீதமானவர்கள் போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புடையவர்களாவர். இதனால் சிறைச்சாலைகளில் பெரும் இடநெருக்கடி காணப்படுவதோடு கைதிகளை நிர்வகிப்பதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் போதைப் பொருள் பாவனை தொடர்பாக கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படும் கைதிகள் நீதிமன்றங்களினூடாக பொலனறுவை குடாகலுவ புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட உள்ளனர். இவர்களுக்கு 6 மாத கால புனர்வாழ்வு வழங்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட உள்ளனர். எதிர்காலத்தில் சிறைச்சாலையில் காணப்படும் இடநெரிசல் பெருமளவு குறைவடையும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.