பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றி

வடக்கிற்கான ரயில்தடம் அமைக்கும் பணிகளில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றியளித்துள்ளது. ரயில் சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கையாக நேற்றுமாலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ரயில் அறிவியல் நகர்வரை சென்றடைந்துள்ளது. எதிர்வரும் செப்ரெம்பரில் கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வமான பயணிகள் ரயில்சேவை ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஏற்கனவே ரயில் நிலையங்கள் இருந்த இடங்களில் புதிதாக ரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் மற்றும் ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

நவுறு தீவிலுள்ள இலங்கையர்களுடன் தொடர்பு துண்டிப்பு-

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றடைந்து நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த தமது உறவினர்களுடன் இரு வாரங்களுக்கு மேலாக தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நவுறுதீவு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடையே கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற மோதலை அடுத்தே அங்குள்ளவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாகாணசபை வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கங்கள்-

மாகாண சபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்றுமுதல் மாவட்ட செயலாளர் காரியாலயங்கள் ஊடக விநியோகிக்கப்படவுள்ளன. குறித்த இலக்கங்கள் தேர்தல் திணைக்களத்தினால் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணையார் மகிந்த தேசப்பிரிய மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டன. இதன்போது, தேர்தல் வாக்களிப்புகள் இடம்பெறும் தருணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டதிட்டங்கள் தொடர்பாகவும் தேர்தல்கள் ஆணையாளர், அரசியல்கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தவிர தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது அரச நிறுவனங்களின் உடமைகளை பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு மேலதிக செயலாளர் ஒருவரை நியுமிக்குமாறும் ஆணையாளர் நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டு போதனா வைத்தியசாலையில் பணிப்பகி ஷ்கரிப்பு-

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் சிற்றூழியர் ஒருவரை நேற்றையதினம் இரவு தாக்க முற்பட்டதுடன், அவரை புகைப்படம் எடுத்ததாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மதுபோதையில் குறித்த பெண் சிற்றூழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். சம்;பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் நேற்றிரவு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களையும் பொலீசார் கைது செய்ததை அடுத்து வைத்திசாலையின் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது