19 வேட்பு மனுக்களும் ஏற்பு, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிக்கான ஆட்சேபனை நிராகரிப்பு-
ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் ஆட்சேபம் தெரிவிக்கும் காலத்தில் இரண்டு பிரதான வேட்பாளர்களின் வேட்பு மனுக்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேட்புமனுவிற்கு கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நா.அமரகோனும் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். எனினும் 1981ம் ஆண்டு 15ம் இலக்க சரத்தின்படி ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரை தெரிவுசெய்யும் வேட்புமனு விடயங்களில் காணப்படும் அதிகாரத்திற்கு அமைய தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறித்த ஆட்சேபனைகளை நிராகரித்துள்ளார். தேர்தல் சட்டத்திட்டங்களுக்கு புறம்பானதாக அந்த ஆட்சேபனைகள் காணப்பட்டதால் அவற்றை நிராகரிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார். இதேவேளை, வேட்புமனு தாக்கல் செய்த 19 வேட்பாளர்களும் சரியான முறையில் விண்ணப்பித்துள்ளதால் அவற்றை ஏற்றுக் கொள்வதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன வேட்புமனு தாக்கல்-
ஜனாதிபதித் தேர்தலின் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் செயலகத்தில் இன்றுகாலை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் 2015 ஜனவரி 8ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மஹிந்த ராஜபக்ஷ இன்றுகாலை 10.30அளவில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராஜகிரிய தேர்தல்கள் செயலகத்திற்குச் சென்ற ஜனாதிபதி ஐமசுமு பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இரு தடவை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ஒருவர் இரு தடவையே ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற சட்டம் 18ம் திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டு இரு முறைக்கு மேலும் பதவியில் இருக்கமுடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஐ.தே.கட்சி பொதுச்செயலர் திஸ்ஸ அரசுடன் இணைவு, கபீர் ஹாசீம் செயலராக நியமனம்-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். திஸ்ஸ அத்தநாயக்க இன்றுகாலை ஐதேக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சமர்பித்திருந்ததாக கூறப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கும் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சுகாதார அமைச்சு உள்ளிட்ட உயர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை திஸ்ஸ அத்திநாயக்க தம்முடன் இணைந்துகொண்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகத்திற்கு அறிவித்துள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கொண்டதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் கபீர் ஹாசிம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தாவல்கள் பற்றிய தகவல்களும், ஆதரவு அறிவிப்புக்களும்-
சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக கட்சியின் பிரதித் தலைவருமாகிய ஜயந்த கெட்டகொட இன்றுமாலை ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டாரவும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரத்தியேக செயலாளர் பீ.எம்.எ குணதாச அரசுடன் இணைந்துள்ளதாகவும், இது தொடர்பாக ஆளும்கட்சியின் பிரபலங்களுடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஆளும் கட்சியின் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் கொலன்ன தொகுதி அமைப்பாளருமாகிய ஜயதிஸ்ஸ ரணவீர எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சியின் அமைப்பாளர்மீது தாக்குதல், மைத்திரி ஆதரவாளர்மீது தாக்குதல்-
குருநாகல் – ஹிரியால ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாளர்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹிரியால சந்தியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த ஆசிரி ஹேரத் என்ற அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது ஆசிரியுடன் இருந்த அவரது மகனை சந்தேகநபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டிச் சென்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை நடாத்துவதாக குருநாகல் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தளம் தங்கொட்டுவையிலுள்ள ஆதரவாளர் ஒருவரின் வீட்டின்மீதே இன்று அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்றபட்டுள்ள போதிலும் குறித்த ஆதரவாளர் தன்னுடைய மனைவி வீட்டில் இருந்தமையினால் அவருக்கு பாதிப்பில்லையென தெரியவருகிறது.
கே பியிடம் விசாரணை செய்ய இன்டர்போலிடம் உதவி-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பில் விடுதலை புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் தகவல்களை பெற்றுக்கொள்ள, இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையின் உதவி கோரப்பட்டுள்ளது. இந்திய மத்திய புலனாய்வு பிரிவு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான வழக்கினை விரைவில் நிறைவு செய்யும் முகமாகவே மத்திய புலனாய்வு பிரிவு இவ்வாறு இன்டர்போலின் உதவியை நாடியுள்ளது. அத்துடன், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு வலியுத்துமாறு இன்டர்போலிடம் மத்திய புலனாய்வுப்பிரிவு கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இ.தொ.கா மகிந்தவுக்கு ஆதரவு, வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கண்காணிப்பாளர்கள்-

முன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை அலரிமாலிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் ஆதரவை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். இது இவ்விதமிருக்க வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு, தேர்தல் கண்காணிப்பாளர்கள் விஜயம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் இதற்கான அனுமதியை அளித்துள்ளார். வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்குச் செல்ல தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்படும் பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது இதுவே முதற்தடவை என பெப்ரல் அமைப்பில் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.