தேர்தல் பிரசாரத்தின்போது பொது சொத்துகளின் பயன்பாடு அதிகரிப்பு-
ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொது சொத்துக்களை பயன்படுத்துகின்றமை வெகுவாக அதிகரித்துள்ளதாக இலங்கை ட்ரான்ஸ்பேரன்ஸி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நிறுவனங்களில் கடமையாற்றும் உயர்நிலை அதிகாரிகள் இந்நடவடிக்கைகளுக்காக தமது நேரடி பங்களிப்பை வழங்குவதாக இலங்கை ட்ரான்ஸ்பேரன்ஸி நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் சட்டத்தரணி எஸ்.ரணுன்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேர்தல்கள் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளர்இ இவ்வாறான செயற்பாடுகளினால் அரச நிறுவனங்களுக்கு பாரியளவு நஸ்டம் ஏற்படுகின்றது. இதனை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை அரச சொத்துக்கள் மற்றும் அரச அதிகாரிகளை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் 76 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்கு பதிவாகியுள்ளன. அரச அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் 29 முறைப்பாடுகளும், பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பில் 32 முறைப்பாடுகளும் இதில் அடங்குவதாக தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கும் பிரிவு அறிவித்துள்ளது.
வடபகுதி மக்கள் மகிந்த ஆட்சியில் அதிகாரப்பகிர்வை எதிர்பார்க்க முடியாது-ராஜித-
மகிந்த ஆட்சியில் இருக்கும்வரை வடபகுதி மக்கள் அதிகாரப்பகிர்வை எதிர்பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு ஒருபோதும் எதையும் வழங்க விரும்பவில்லை தரகுப்பணத்தை பெறவே வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இவ் அபிவிருத்தி மூலம் மக்களுக்கு நன்மை கிட்டவில்லை, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை, அத்துடன் அரசியல் சீர்திருத்தம், நிறைவேற்று அதிகாரமுறை ஒழிப்பு, தமிழ்மக்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு உட்பட பல விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் பலதடவை கேட்டும் அவர் அவற்றை நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவை எவற்றிற்கும் தயாராக இல்லை என தெரிந்தபின்பு தான் அரசிலிருந்து வெளியேறினேன் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியாவில் காணாமற்போனோர் தொடர்பான சாட்சிப் பதிவுகள்-
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தமது சாட்சி பதிவுகளை வவுனியாவில் மேற்கொண்டு வருகின்றது. இதன்படி, நேற்று மூன்றாம் நாளாகவும் வவுனியாவில் சாட்சி பதிவுகள் இடம்பெற்றன. நேற்றை மூன்றாம் நாள் நிறைவில் வவுனியா மாவட்டத்தில் இருந்து 219 புதிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வவுனியா பிரதேச செலயகத்தில் நேற்றுக்காலை 9 மணிக்கு ஆரம்பமான ஆணைக்குழு விசாரணைகளுக்கு 61 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை மூன்றாம் நாளாக வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நேற்றுவரையில் 135பேர் சாட்சியமளித்துள்ளதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் கண்டிக்கிடையில் விசேட ரயில் சேவை-
யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையில் விசேட ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வார இறுதி நாட்களில் இந்த விசேட ரயில் சேவை நடத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சனிக்கிழமைகளில் அதிகாலை 3.55க்கு கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் புறப்படவுள்ளது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கண்டியை நோக்கி புறப்படவுள்ளதாகவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
புங்குடுதீவு ஒன்றியம் வழங்கிய பொருட்கள், புங்குடுதீவு வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றியத்தின் ஆலோசனை சபை உறுப்பினர்களுள் ஒருவரான திரு.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள், விடுத்த வேண்டுகோளுக்கமைய பேர்ன் நகரிலுள்ள சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினால் திரு. கைலாசநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்ட வைத்தியசாலை தேவைக்கான ஒரு தொகை பொருட்கள், புங்குடுதீவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு தற்போது புங்குடுதீவு வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. வைத்தியர்கள் பயன்படுத்தும் உடைகள், சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் உடைகள், மற்றும் நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய உடைகள் (சிறுதொகை) என்பனவே சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபையின் ஊடாக புங்குடுதீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு தேவையான ஒரு தொகை பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு, மேலதிகமாக இருந்த வைத்தியர்கள், பணியாளர்கள் பயன்படுத்தும் உடைகள், சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் உடைகள் என்பன வேலணை சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக, யாழ். வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐ.தே.கட்சி கூட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது தாக்குதல்-
அநுராதபுரம் கல்நேவ பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்று நிறைவுபெற்றதன் பின்னர் அங்கு வந்த சிலர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். நேற்றிரவு 8.45அளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். இதனால் நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கும் ட்ரக் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துவதற்காக வந்தவர்கள் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஏழு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
எதிரணி பொது வேட்பாளருக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை சேதம்-
காலி – வதுரப பகுதியில் இன்றுமாலை 4மணிக்கு இடம்பெறவிருந்த, எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை சிலரால் சேதமாக்கப்பட்டுள்ளது. இரண்டு டிபேன்டர்களில் வந்த குழுவினரே இன்று அதிகாலை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவர்கள் அலங்காரங்களுக்கு தீ வைத்தமையால் வாகனம் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை கல்நெவ – கலங்குடிய மவாத்தகம பிரசேத்தில் ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சில மோட்டார் சைக்கிள்களுக்கு இதன்போது சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் புத்தளம், மதுரங்குளி நகரிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் உருவப் படங்கள் இரண்டிற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என பொலீஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மீரியபெத்த பிரதேசம் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்-
பதுளை, கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவுப் பிரதேசம் பாதுகாப்பு வலயமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இம்மண் சரிவுப் பிரதேசத்தில் மரக்கன்றுகளை நாட்டுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் இப்பகுதியில் மண்சரிவில் இறந்தவர்களுக்கான நினைவுத் தூபியொன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது. கடந்த அக்டோபர் 29ல் இடம்பெற்ற மண்சரிவில் 37 பேர் பலியானதுடன் 13 பேரின் சடலங்கள் மட்டுமே தோண்டி எடுக்கப்பட்டன. இறந்தவர்களின் உறவினர்களினது வேண்டுகோளுக்கிணங்க சடலங்கள் தோண்டி எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. மேற்படி மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் மேற்கொள்ளப்படுமென்றும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண கீர்த்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நோர்வே விஜேந்திரனின் கவிதை நூல் மற்றும் இறுவெட்டு வவுனியாவில் வெளியீடு-
வவுனியா தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கடந்த 14.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்றுகாலை 9மணியளவில் ஆதி விநாயகர் பாலாம்பிகை கலாசார மண்டபத்தில் நோர்வே விஜேந்திரனின் கவிதை நூல் மற்றும் இறுவெட்டு வவுனியாவில் வெளியீட்டு நிகழ்வு தமிழருவி சிவகுமார் ஆசிரியர் தலைமையில் ஆரம்பமானது. தமிழருவி சிவகுமார் ஆசிரியர் “நாவலர்” பட்டம் பெற்ற பின்னரான முதலாவது நிகழ்வு இதுவாகும். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும் தற்போது நோர்வேயில் வசிப்பவருமான விஜேந்திரனின் கவிதை நூல் மற்றும் இறுவெட்டு வெளியீடு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வவுனியா தமிழ் சங்கத் தலைவரும் முன்னாள் வவுனியா நகர பிதாவுமான திரு எஸ்.என்.ஜி.நாதன், புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியாவின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), துணுக்காய் உதவி பிரதேச செயலர் குணபாலன், சட்டத்தரணி தயாபரன், லயன் பாலேந்திரன், கிளிநொச்சி பண்டிதர் பரந்தாமன் கவின் கலைக்கல்லூரி இயக்குனர், செந்தணல் வெளியீட்டக நிர்வாகிகள், சமய ஆர்வலர் தேவராஜா, வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சின் இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன் சமூக ஆர்வலர் செந்தில், ஊடகவியலாளர் சந்திரபத்மன் பாபு, வெகுஜென அமைப்பாளர் பிரதீபன் என பல சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள் என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.